அயோத்தி விவகாரம்; சட்டம் - ஒழுங்கு தொடர்பாக தலைமை செயலர், டிஜிபி-யுடன் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் இன்று ஆலோசனை

புதுடெல்லி: அயோத்தி நில உரிமை வழக்கில் தீர்ப்பு வெளியாகவுள்ளதை அடுத்து தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனையில் உத்திரபிரதேச தலைமை செயலாளர் மற்றும் டிஜிபியுடன் ஆலோசனை நடத்துகிறார். உத்தரபிரதேசத்தில் சட்டம் - ஒழுங்கு தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்துகிறார். உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் இடத்தின் உரிமை  தொடர்பான வழக்கில் கடந்த 2010ம் ஆண்டு அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்புக்கு எதிராக 14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்கள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்  தலைமையிலான 5 நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்தது. கடந்த ஆகஸ்ட் 6ம் தேதி முதல் நாள்தோறும் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. 40 நாட்கள் நடந்த விசாரணையில் இருதரப்பு வாதங்களும் கடந்த  மாதம் 16ம் தேதியுடன்  முடிவடைந்தது. இதனைத்தொடர்ந்து இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்ச நீதிமன்ற அமர்வு ஒத்திவைத்தது. இந்த வழக்கின் தீர்ப்பு 17ம் தேதிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அயோத்தி வழக்கு தீர்ப்பின் காரணமாக நாட்டில் அசாதாரண சூழல் உருவாக வாய்ப்பு உள்ளது. எனவே இதனை எதிர்கொள்ளும் வகையில் போதுமான முன்னேற்பாடுகளை மாநிலங்கள் செய்து கொள்ளவேண்டும். அனைத்து மாநிலங்களிலும்  பாதுகாப்பை பலப்படுத்தவேண்டும். பதற்றம் நிறைந்த பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு போட வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் அயோத்தி நில உரிமை வழக்கில் தீர்ப்பு வெளியாகவுள்ளதை அடுத்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், அம்மாநில தலைமை செயலர், டிஜிபி-யுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

Related Stories:

>