×

மீட்க மத்திய அரசு கைவிரிப்பு டிஎச்எப்எல்லில் பணம் போட்டவர்கள் கதி என்ன?: நிறுவனர்கள் வெளிநாடு செல்ல தடை

புதுடெல்லி: திவான் ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம் (டிஎச்எப்எல்) சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய் கடன் சுமையில் சிக்கித் தவிக்கிறது. இதில் முதலீடு செய்த வாடிக்கையாளர்கள், தங்கள் பணம் திரும்ப கிடைக்குமா என எதிர்நோக்கியுள்ளனர். வைப்பு நிதியாக இந்த நிறுவனத்தில் முதலீடு செய்த பலர் மூத்த குடிமகன்கள். இந்த நிறுவனம் பொதுத்துறை வங்கிகளிடம் மட்டும் சுமார் 50,000 கோடி ரூபாய் கடன் வாங்கி, போலி நிறுவனங்களுக்கு பல ஆயிரம் கோடி கடன் கொடுத்துள்ளது. இந்த நிறுவனத்தின் மீது ஏராளமான மோசடி புகார்கள் உள்ளன. இந்நிலையில், இந்த நிறுவனத்தை மீட்க யூனியன் வங்கி மற்றும் பாரத ஸ்டேட் வங்கி தலைமையிலான வங்கிகள் கூட்டமைப்பு முயற்சி மேற்கொண்டு, அரசு தரப்பை நாடியதாக கூறப்படுகிறது.

 இதுகுறித்து வங்கி மற்றும் மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகையில், ‘டிஎச்எப்எல் தனியார் நிறுவனம். இந்த நிறுவனத்தை மீட்டெடுக்க வங்கிகளுக்கு உத்தரவு பிறப்பிக்க முடியாது என மத்திய அரசு மறுத்து விட்டது. இந்த நிறுவனம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனை மீட்காவிட்டால் இந்த ஆண்டு இறுதிக்குள் வராக்கடனாக மாறிவிடும் அபாயம் உள்ளது என்றனர். இதற்கிடையில், 63 மூன்ஸ் டெக்னாலஜி நிறுவனம், டிஎச்எல்எல்லிடம் இருந்து 200 கோடியை வசூலிப்பது தொடர்பாக வழக்கு போட்டது. இதை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம், டிஎச்எப்எல் நிறுவனர்கள் தீராஜ் வத்வான் மற்றும் கபில் வத்வான் ஆகியோர் நாட்டில் இருந்து வெளியேற தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுபோன்ற பல்வேறு சிக்கல்களால் இந்த நிறுவனத்தில் பணம் போட்டவர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

Tags : Government ,DHFL ,Founders ,competitors , Federal government , recover, DHFL,Founders banned
× RELATED 5ம் கட்ட தளர்வுகளை அறிவித்தது மத்திய...