×

ஒருநாள் மகளிர் கிரிக்கெட் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா

நார்த் சவுண்ட்: இந்திய பெண்கள் அணி வெஸ்ட் இண்டீஸ் தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள், 5 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி முதல் ஒருநாள் போட்டியில் ஒரு ரன் வித்தியாசத்தில் தோற்றது. ஆனால் 2வது போட்டியை 53 ரன் வித்தியாசத்தில் இந்தியா வென்றது. அதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தது. இந்நிலையில் கடைசி மற்றும் 3வது ஒருநாள் போட்டியும் நார்த் சவுண்டில் நடந்தது. இதில் டாஸ் வென்று முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் 50 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 194 ரன் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக டெய்லர் 79, ஆன் கிங் 38,  ஹெய்லி மாத்யூஸ் 26 ரன் எடுத்தனர். இந்தியா தரப்பில் ஜூலர் கோஸ்வாமி 2, பூனம் யாதவ் 2, ஷிகா பாண்டே, ராஜேஸ்வரி கெய்க்வாட், தீப்தி சர்மா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

தொடர்ந்து 195 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது இந்தியா. அதிரடியாக  விளையாடிய   ஜெமீமா ரேட்ரிக்ஸ் 6 பவுண்டரிகளுடன் 69 ரன், ஸ்மிரிதி மந்தனா 63 பந்துகளில் 9 பவுண்டரி, 3 சிக்சருடன் 74 ரன்,  கேப்டன் மிதாலி ராஜ் 20, பூனம் ராவுத் 20 ரன் எடுத்து வெளியேறினர். இந்தியா 42.1 ஒவரில்  4 விக்கெட் இழப்புக்கு 195 எடுத்து  6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வெ.இண்டீஸ் தரப்பில் ஹெய்லி மாத்யூஸ் 3, அஃபை ஃபிளட்சர் ஒரு விக்கெட் வீழ்த்தினர். இந்தியாவின் ஸ்மிரிதி மந்தானா  சிறந்த வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டார்.இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

வீராட்டை முந்திய ஸ்மிரிதி
ஸ்்மிரிதி மந்தனா 48 ரன் எடுத்த போது ஒருநாள் போட்டிகளில் 2000 ரன்னை எட்டிய இந்தியர்களின் பட்டியலில் இணைந்தார்.  அவர் 51 போட்டிகளில் இந்த இலக்கை எட்டினார். வீராட் கோஹ்லி 53 போட்டிகளில் 2000 ரன் எடுத்தது குறிப்பிடதக்கது. ரன் குவிக்கும் வேகத்தில் வீராட்டை முந்திய ஸ்மிரிதி இதுவரை 2025 ரன் குவித்துள்ளார். ஷிகர் தவான் 48 போட்டிகளில் இந்த இலக்கை எட்டியது குறிப்பிடத்தக்கது.

Tags : India ,West Indies ,series , One-day ,women's cricket,West Indies, India , series
× RELATED ஐசிசி உலக கோப்பை ‘டூர்’ நியூயார்க்கில் தொடங்கியது