பர்கினா பாசோவில் தாக்குதல் 37 சுரங்க தொழிலாளர்கள் பலி

ஓகாடோகா: மேற்கு ஆப்ரிக்க நாடான பர்கினா பாசோவில் சுரங்க தொழிலாளர்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 37 பேர் பலியாயினர். மேற்கு ஆப்ரிக்க நாடான பர்கினா பாசோவில் தங்கச் சுரங்கங்கள் உள்ளன. இங்கு கனடாவைச் சேர்ந்த ‘செமாபோ’ என்ற நிறுவனம் 2 சுரங்கங்களில் பணிகளை மேற்ெகாண்டுள்ளது. இதன் அருகேயுள்ள சகேல் மாகாணத்தில், தீவிரவாதிகள்  அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.இதனால் இங்கு ராணுவ பாதுகாப்புடன் ஊழியர்கள் பஸ்களில் அழைத்துச் செல்லப்படுகின்றனர். நேற்று முன்தினம் இரண்டு பஸ்களில் ஊழியர்கள் சுரங்கத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களுக்கு பாதுகாப்பாக ராணுவ வாகனம் சென்றது.

பாங்கோ தங்கச் சுரங்கத்திலிருந்து 40 கி.மீ தொலைவில் பஸ்கள் சென்ற போது, ராணுவ வாகனம் வெடிகுண்டில் சிக்கி சிதறியது. அப்போது தீவிரவாதிகள் இரண்டு பஸ்களையும் சுற்றிவளைத்து துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 37 பேர் பலியாயினர்; 60 பேர் காயம் அடைந்தனர்.

Related Stories: