பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டம் ‘ஆவாஸ் பிளஸ்’ திட்டத்தில் விண்ணப்பித்தவர்களுக்கு வீடு இல்லை: லட்சக்கணக்கில் மனு கொடுத்தவர்கள் காத்திருப்பு

சிறப்பு செய்தி

பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தில் ‘ஆவாஸ் பிளஸ்’ பிரிவில் விண்ணப்பித்தவர்களுக்கு இப்போதைக்கு வீடு இல்லை என்று தகவல் வெளியாகி இருப்பது விண்ணப்பதாரர்களை ஏமாற்றம் அடைய செய்துள்ளது. மத்திய அரசு வரும்  2022ம் ஆண்டிற்குள் நாட்டிலுள்ள அனைவருக்கும் சொந்த வீடு தருவதாக உறுதிமொழி அளித்திருந்தது. 2019க்குள் நாட்டின் ஊரக பகுதிகளில் 10 மில்லியன் வீடுகளும், 2022க்குள் நாட்டின் நகர்ப்புறப் பகுதியில் 10 மில்லியன் வீடுகளும் கட்டித்  தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. கிராமப்புறம், நகர்புறம் என்று இரு பிரிவாக இதில் பல்வேறு கடனுதவி திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.  இதில் விண்ணப்பதாரர் தாங்களாகவே வீடுகள் கட்டிக்கொள்ளும்போது அவர்களுக்கு ரூ.2.10  லட்சம் வரை அரசால் நிதியுதவி வழங்கப்படுகிறது. பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா-கிராமின் (பிஎம்ஏஒ-ஜி) திட்டத்தில் அனுமதிக்கப்படுகின்ற வீடுகளில் 60 சதவீதம் வீடுகள் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், 4 சதவீத வீடுகள்  சிறுபான்மையினருக்கும் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் பட்டியல் தயாரிக்கப்பட்டு அதில் முன்னுரிமையுள்ள தாழ்த்தப்பட்டவர்கள், சிறுபான்மையினர் பல்வேறு திட்டங்களில் வீடுகள் பெற்றுள்ளனர்.  பொதுபிரிவில் வருகின்றவர்கள் பலரும்  வீடு கட்டும் திட்டங்களில் பயன்பெறாமல் உள்ளனர். மேலும் ஏற்கனவே தயாரித்த முன்னுரிமை பட்டியலில் தகுதியவற்றவர்கள் பலரும் இடம் பெற்றுள்ளனர். இவர்களை உடனே நீக்க வேண்டும் என்று அறிவிப்பு வழங்கப்பட்டிருந்தது. இதற்காக  ‘ஆவாஸ்’ சாப்ட்வேரில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருந்தது. வீடு உள்ளவர்கள், நிரந்தரமாக குடியிருக்காதவர்கள், தற்போது அரசு வேலை உள்ளவர்கள் ஆகியோரை பட்டியலில் இருந்து நீக்க அறிவுரை வழங்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில் பிஎம்ஏஒஜி திட்டத்தில் தற்போது பட்டியலிடப்பட்டுள்ள அனைவருக்கும் வீடு வழங்கிய பின்னர் புதிய பட்டியல் பரிசீலனை செய்யப்பட்டால் போதும் என்று மத்திய அரசு சார்பில் மாநிலங்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளது.

இதனால் ‘ஆவாஸ் பிளஸ்’ என்ற பெயரில் மாநிலங்களில் தயார் செய்யப்பட்டு வந்த புதிய பயனாளிகள் பட்டியலில் இடம் பெற்றவர்களுக்கு தற்போது வீடுகள் வழங்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. ஆவாஸ் பிளஸ்  திட்டத்தின்கீழ் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வீதம் பதிவு செய்யப்பட்டுள்ளன. குமரி மாவட்டத்தில் ‘ஆவாஸ் பிளஸ்’ பெயரில் 5626 விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனை போன்று  ஒவ்வொரு மாவட்டத்திலும் என்று தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான விண்ணப்பங்கள் வழங்கிவிட்டு மக்கள் காத்திருக்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழக நிலவரம் என்ன?

* மத்திய அரசின் புள்ளி விபரத்தின்படி பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின்கீழ் தமிழகத்தில் 5 லட்சத்து 27 ஆயிரத்து 552 வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதில் 3 லட்சத்து 68 ஆயிரத்து 441 வீடுகளுக்கு அனுமதி  வழங்கப்பட்டது.

* அனுமதி வழங்கப்பட்டுள்ளதில் பெண்கள் 48,153, ஆண்கள் 78,205, கணவன் மனைவி இணைந்து 2 லட்சத்து 42 ஆயிரத்து 78 ஆவர்.

* வீடுகள் கட்டும் பணி முடிக்கப்பட்டதில் ஆண்கள் 26,416, பெண்கள் 44,501, கணவன் மனைவி இணைந்து 1 லட்சத்து 25 ஆயிரத்து 105 என்று மொத்தம் 1 லட்சத்து 96 ஆயிரத்து 26 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

Related Stories: