நான் பங்கேற்காத நிகழ்ச்சியில் என் போட்டோவை பயன்படுத்தக்கூடாது: திமுகவினருக்கு உதயநிதி வேண்டுகோள்

சென்னை: நான் பங்கேற்காத நிகழ்ச்சியில் என் புகைப்படத்தை பயன்படுத்தக்கூடாது என்று திமுகவினருக்கு உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கை: இனி நான் சம்பந்தப்படாத, நான் கலந்து கொள்ளாத நிகழ்ச்சி பற்றிய நாளிதழில் அறிவிப்புகளிலோ, சுவரோட்டிகளிலோ, அழைப்பிதழ்களிலோ என் புகைப்படத்தை திமுகவினர் யாரும் பயன்படுத்த கூடாது. பெரியார், அண்ணா, கலைஞர், பேராசிரியர், கழக தலைவர் போன்ற நம் முன்னோடிகளின் புகைப்படங்கள் தான் இடம் பெற வேண்டும். இதே போல், முத்தழறிஞர் கலைஞர் என்பவர் ஒரே ஒருவர் தான். என் பெயருக்கு முன்னால், மூன்றாம் கலைஞர், திராவிட தலைவர், திராவிட தளபதி, இளம் தலைவர் போன்ற பட்டப்பெயர்கள் இடுவதை எந்த வகையில் சேர்ப்பது என்றே தெரியவில்லை. இப்படி பட்டப்பெயரிட்டு விளிப்பதால், நாளையில் இருந்து நான் என்ன கலைஞராகிவிடப்போகிறேனா? கலைஞருக்கு நிகர் கலைஞர் மட்டுமே. நம் தலைவருக்கு நிகர் தலைவர் மட்டுமே.

இனி இது ேபான்ற தர்மசங்கடங்களுக்கு என்னை ஆளாக்கமாட்டீர்கள் என நம்புகிறேன். நான் உங்களின் ஒருவனாக, உங்களின் மனதுக்கு நெருக்கமான உதயநிதியாகவோ எப்போதும் இருக்க விரும்புகிறேன். அதனால், தயவு செய்து பட்டப்பெயர்களை தவிர்க்குமாறு கேட்டு கொள்கிறேன். ஏற்கனவே பேனர் வேணாம்னு சொல்லிட்டீங்க. இப்ப பட்டாசு கூடாதுங்குறீங்க, பட்டப்பெயரையும் தவிர்க்க சொல்றீங்க, கூடுதலாக போட்டோவே வேண்டாம்ங்கிறீங்க. நீங்க வர்றதை அப்புறம் நாங்க எப்படிதான் கொண்டாடுறது என்று உரிமையுடன் கேள்வி எழுப்பும் உங்களின் மனக்குரலை என்னால் கேட்க முடிகிறது. உங்களை பற்றி நானும், என்னை பற்றி நீங்களும் புரிந்து கொள்ள, பகிர்ந்து கொள்ள இந்த பட்டாசு, பட்டம், புகைப்படம் தேவையா என்ன? பொய்யர்களின் இரைச்சல் அதிகரித்துள்ள இந்த விஷச்சூழலில் சமூக நீதியை, இனத்தை, பண்பாட்டை, மொழியை காக்க வேண்டிய இடத்தில் உள்ள நாம் இது போன்ற தேவையற்ற விளம்பரங்களை தவித்து ஆக்கப்பூர்வமாக கடமையாற்றுவோம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: