ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சியில் தமிழ் புறக்கணிப்பு : வைகோ கண்டனம்

சென்னை: ஆசிரியர் திறன் மேம்பாட்டுப் பயிற்சியில் தமிழ் புறக்கணிக்கப்பட்டதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: மத்திய அரசு 2014ம் ஆண்டில் பள்ளி தலைமைக்கான தேசிய மையம் தொடங்கிய பின்னர் நடந்த இதுபோன்ற திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளில் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளுக்கு முக்கியத்துவம் தரப்பட்டு வந்தது. ஆனால் தற்போது ஆசிரியர்களில் இந்தி, ஆங்கிலம் மொழி ஆளுமை மிக்கவர்கள் மட்டுமே தலைமைத் திறன் மேம்பாடு பயிற்சி பெற முடியும் என்று மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை வரையறுத்து இருப்பதன் மூலம் இந்தி மொழி திணிப்புக்கு வழிவகை செய்யப்பட்டு இருக்கிறது.

ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்தியை வலிந்து திணிப்பது ஒருமைப்பாட்டுக்கு உலை வைத்துவிடும் என்பதை மத்திய பா.ஜ. அரசு உணர வேண்டும். அடுத்த ஆண்டு ஜனவரியில் டெல்லியில் நடைபெற உள்ள ஆசிரியர்கள் தலைமைப் பண்பு மேம்பாடு மாநாடு மற்றும் பயிலரங்கில் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் ஆளுமைமிக்க ஆசிரியர்களையும் பங்கேற்க அனுமதிக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

Related Stories: