அமைச்சர் பாண்டியராஜனுக்கு எதிராக திமுக-வினர் போராட்டம்: மறப்போம், மன்னிப்போம்!...மு.க.ஸ்டாலின் அறிக்கை

சென்னை: மிசா காலத்தில் ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் இழிவுப்படுத்தியதாக திமுக  குற்றம் சாட்டியது. இதனையடுத்து அமைச்சர் மாஃபா பாண்டியராஜனுக்கு எதிராக சென்னை ஆவடியில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் திமுக-வினர்  ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். முக.ஸ்டாலினின் மிசா சிறைவாசத்தை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கொச்சைப்படுத்தி பேசியதாக குற்றம்  சாட்டியுள்ளனர்.

இந்நிலையில் போராட்டத்தை தொண்டர்கள் கைவிட வலியுறுத்திய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், அமைச்சர்  பாண்டியராஜன் பயன்படுத்தும் சொல், அவர் யார் என்பதையும், அவரது தரத்தையும் நாட்டு மக்களுக்கு தோலுரித்துக் காட்டிவிட்டது. மறப்போம்,  மன்னிப்போம்! இதுதான் பேரறிஞர் அண்ணா அவர்களும், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களும் நமக்குக் கற்றுத் தந்த அரசியல் பாடங்கள். தியாகம்  செய்து அரசியலுக்கு வந்து மக்கள் தரும் பதவி பொறுப்பை அடைந்தவர்களுக்கே தியாகம் பற்றி தெரியும். பாண்டியராஜன் என்ன படித்தார், எதைக்  கற்றார், எதை புரிந்துகொண்டார் என்பதை அவர் பேச்சு காட்டி விட்டது

சுமார் 44 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த திமுக.,வின் தியாக வரலாற்று நிகழ்வுகளை, அரசியல் லாப நோக்கில், வக்கிர எண்ணத்துடன், திருத்தி எழுத  எத்தனிக்கிறார், அமைச்சர் பாண்டியராஜன். இதுபோன்ற எத்தனையோ ஏசல்களையும் இழிமொழிகளையும் அவமானங்களையும் சுமந்துதான், திமுக என்ற  தன்மான - அறிவியக்கம் எழுந்து, தலை நிமிர்ந்து நிற்கிறது. எனவே, அவருக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் நடத்தி வரும் எதிர்ப்புப்  போராட்டங்களை, அன்புகூர்ந்து தவிர்க்குமாறு கழகத் தோழர்களைக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு ஸ்டாலின் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Related Stories: