மகாராஷ்ராவில் புதிய அரசு அமைக்க சிவசேனாவின் ஆதரவு பெறப்படும்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேட்டி

மும்பை: மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜ 105 இடங்களிலும் அதன் கூட்டணிக் கட்சியான சிவசேனா 56 இடங்களிலும் வெற்றி  பெற்றன. ஆட்சியமைக்க இந்த கூட்டணிக்கு பெரும்பான்மை உள்ளது. ஆனால், இரு கட்சிகளுக்கும்  தலா இரண்டரை ஆண்டுகளுக்கு சுழற்சி முறையில் முதல்வர் பதவி, அமைச்சரவையில் சரிபாதி பிரதிநிதித்துவம் ஆகிய கோரிக்கைகளை  சிவசேனா பிடிவாதமாக வலியுறுத்தி வருகிறது. இந்த கோரிக்கைகளை ஏற்க பாஜ மறுப்பதால் புதிய  அரசு பதவியேற்பதில் சிக்கல் நீடிக்கிறது.

Advertising
Advertising

மறுபுறம், சிவசேனாவின் ஆதரவு இல்லாமலேயே தேவேந்திர பட்நவிஸ் தலைமையில் சிறுபான்மை அரசாக பதவி ஏற்பதற்கான ஏற்பாடுகளை பாஜ செய்து வருகிறது.  தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சியமைக்க முயற்சித்த சிவசேனாவின் கனவு நிறைவாகவில்லை.

சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் நேற்று, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தலைவர் சரத் பவார்,  மகாராஷ்டிராவில் சிவசேனாவுடன் சேர்த்து தேசியவாத காங்கிரஸ் ஆட்சி அமைக்காது. பெரும்பான்மை பெற்றுள்ள பாஜகவும் சிவசேனாவும் இணைந்து விரைவில் அரசை அமைக்க வேண்டும். இதுதான் ஒரே வழி. எதிர்க்கட்சியாக  நாங்கள் பங்குவகிப்போம். ஜனாதிபதி ஆட்சியை தவிர்ப்பதற்கு இதைத் தவிர வேறு வழியில்லை என்றார்.

 இதற்கிடையே, நேற்று முன்தினம் காலை டெல்லி சென்ற முதல்வர் தேவேந்திர பட்நவிஸ், பாஜ தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷாவை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். அப்போது, எக்காரணம் கொண்டு முதல்வர்  பதவியையும், உள்துறை அமைச்சர்  பதவியையும் சிவசேனாவுக்கு விட்டுக் கொடுப்பதில்லை என்று அமித்ஷா திட்டவட்டமாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.  இந்நிலையில், டெல்லியிலிருந்து மகாராஷ்ரா மாநிலம், நாக்பூரில் உள்ள ஆர்எஸ்எஸ் தலைமையகத்துக்கு நிதின் கட்கரி அவசர பயணமாக செல்லவுள்ளார்.

இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த  நிதின் கட்கரி, மராட்டியத்தில் பாஜக-சிவசேனா கூட்டணி அரசு பதவியேற்கும் என்றும், புதிய அரசுக்கு சிவசேனாவின் ஆதரவு பெறப்படும் என்றும் குறிப்பிட்டார். புதிய அரசுக்கு தேவேந்திர பத்னாவீஸ்தான் தலைமை வகிப்பார் என்றும் நிதின் கட்கரி தெரிவித்தார். நிதின்கட்கரி முதல்வராக பதவியேற்கலாம் என்று செய்திகள் வெளியானது குறித்த கேள்விக்கு, மாநில அரசியலுக்கு திரும்பி வரும் கேள்விக்கே இடமில்லை என்று கட்கரி பதிலளித்தார்.

Related Stories: