×

நவ.24 -ம் தேதி அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம்: அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெறும் என அறிவிப்பு

சென்னை: அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நவ.24-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக 2017 செப். 12-ம் தேதி சசிக்கலா மற்றும் டிடிவி தினகரன் நியமனம் செல்லாது உள்ளிட்டவற்றிற்காக அதிமுகவின் பொதுக்குழு கூட்டமானது நடைபெற்றது. அப்போது சசிக்கலா நீக்கம் செய்யப்பட்டார். அதற்கு பின்பாக 2018-ம் ஆண்டு கஜா புயலின் காரணமாக பொதுக்குழு கூட்டமானது நடைபெறவில்லை. ஆனால் அரசியல் காரணங்களுக்காக இது நடத்தப்படவில்லை என்பது குறித்த விமர்சனங்கள் அதிமுக மீது முன்வைக்கப்பட்டது.

ஆகவே (2019) இந்த ஆண்டாவது பொதுக்குழு கூட்டம் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்தது. உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வரக்கூடிய நிலையில் பொதுக்குழு கூட்டம் சிக்கல்களை ஏற்படுத்திவிடக் கூடாது என்பது போன்ற சிக்கல் அதிமுகவுக்கு இருந்து வந்தது. இந்த வகையில் நேற்று சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்ற நிலையில் இன்று அதிகார பூர்வமாக அதிமுகவின் பொதுக்குழு கூட்டமானது நவ.24-ம் தேதி நடைபெறும் என அதிகார பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. முக்கியமாக ஜெயலலிதா மறைவுக்கு பின்பு இரண்டு முறை அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

முதலாவதாக நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தின் போது சசிக்கலாவை ஒருமனதாக தேர்ந்தெடுப்பது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு போயஸ் கார்டன் சென்று வழங்கப்பட்டது. அதற்கு பின்பாக ஓ.பி.எஸ். இ.பி.எஸ். இணைந்து பொதுக்குழு கூட்டம் கூடி சசிக்கலா நீக்கம் செய்யப்பட்டதும் பொதுக்குழு கூட்டத்தில் நடைபெற்றது. அதனை தொடர்ந்து பொதுக்குழு கூட்டம் நடைபெறாமல் இருந்த நிலையில் தற்போது அறிவிப்பானது வெளியாகியுள்ளது. பொதுக்குழு கூட்டத்தை பொறுத்தவரையில் கட்சியில் இருக்க கூடிய நிர்வாகிகள் தங்களது கருத்தை தெரிவிப்பதற்காக வாய்ப்பு இருக்கும்.

பொதுவாக உயர்மட்ட கூட்டமே அதிமுக தலைமை அலுவகத்தில் நடைபெற்று வருவதால் அதிமுகவின் தொண்டர்கள் மற்றும் அடிமட்ட நிர்வாகிகள் மனநிலை எவ்வாறு உள்ளது என்பது குறித்த நிலைபாடு கேள்விக்குறியாகவே இருந்தது. ஏனென்றால் பொதுக்குழுவை பொறுத்தவரையில் 2,150-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இருக்கின்றனர். அவர்கள் கட்சியின் நிலைப்பாடு குறித்து, தற்போது மக்கள் எந்த நிலைப்பாட்டில் இருக்கிறார்கள் என்பதை தெரிவிக்கும் விதமாகவே பொதுக்குழு கூட்டம் இருக்கும். ஆகவே இந்த பொதுக்குழு கூட்டம் தேர்தலை ஒட்டி நடைபெறுவதால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


Tags : AIADMK Executive Committee and General Committee Meeting ,Executive Committee and General Committee Meeting ,AIADMK , AIADMK, Executive Committee, General Meeting
× RELATED ‘நீட்’டில் விட்டோம்; ஆனால்...