ஸ்பூனை கடிச்சி சாப்பிடலாம்.. நெல் உமி தலையணை.. சுற்றுச்சூழல் கண்டுப்பிடிப்புகளில் அசத்தும் தம்பதியினர்!

“கடந்த மாதம் மாமல்லபுரத்துக்கு வருகை தந்திருந்த இந்திய பிரதமர், காலை கடற்கரையோரம் வாக்கிங் சென்ற போது அங்கிருந்த பிளாஸ்டிக் மற்றும் குப்பைகளை ஒரு பையில் அள்ளிய வீடியோ வைரலானது. இது குறித்து பல கருத்துகள் வெளியானாலும், அடிப்படையில் நாம் வாழும் இடத்தினை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும் என்பது தான். ‘ஸ்வச் பாரத்’ என்ற கோஷத்தை எழுப்பினால் மட்டும் போதாது, ஒவ்வொரு குடிமக்களும் தங்களை சுற்றி இருக்கும் இடத்தினை சுத்தமாக வைத்துக் கொண்டாலே போதும். இதனால் நம் சுற்றுப்புறச் சூழலை பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் முக்கிய கடமை. ஆனா, பெரும்பாலானவர்கள் அதைப் பற்றி சிந்திப்பது இல்லை. நமக்கென்னனு தான் இருக்காங்க. நம்முடைய வேலையை  அடுத்தவர் பார்த்துக் கொள்வாங்கன்னு நாம் தட்டிக் கழிச்சு வந்தா, நம்முடைய இடமே குப்பை மேடாக மாறிவிடும் என்பதில் சந்தேகமில்லை’’ என்கிறார்கள் பெங்களூரைச் சேர்ந்த சுஹாசன் மற்றும் ஹரிகா தம்பதியினர். இவர்கள் ‘சேவ் குளோப்’ என்ற பெயரில் சுற்றுப்புறச் சூழலை பாதிக்காத பொருட்களை தயாரித்து வருகின்றனர்.

‘‘நான் ஐ.டி துறையில் வேலை பார்த்து வந்தேன். எம்.பி.ஏ முடிச்சிட்டு வெப் டிசைனிங் தொழில்ல ஈடுபட்டு இருக்கிறேன். என் மனைவி ஹரிகாவும் எம்.பி.ஏ பட்டதாரிதான். அவங்க ஐ.டி துறையில் வேலை பார்த்து வருகிறார். ரெண்டு பேரும் பல விஷயங்களை பேசுவோம். அலசுவோம். அப்படிதான் எட்டு வருடங்களுக்கு முன்னாடி பிளாஸ்டிக் பயன்பாடு குறித்த சர்ச்சை எங்களுக்குள் எழுந்தது. பிளாஸ்டிக் கவர்கள் முதல் பாட்டில்கள் வரை எல்லாப் பொருட்களையும் மக்கள் சாலையில் வீசிவிட்டு செல்வதை நான் பார்த்திருக்கேன். கடல், ஆறு, ஏரி, குளம்னு நீர்நிலைப் பகுதிகள் எங்கும் பிளாஸ்டிக் தான் நிறைந்து இருக்கும். நாங்களும் அதை பார்த்துவிட்டு கடந்து வந்து இருக்கிறோம். அதற்கு காரணம், இது பற்றிய புரிதல் அப்ப எங்களுக்கு இல்ல. பெரும்பாலானவர்கள் மாதிரி நாங்களும் நமக்கென்ன என்று அதை கண்டுகொள்ளவில்லை.ஆனா, ஒருக்கட்டத்தில் இந்தப் பிரச்னை குறித்து பலரும் பேச ஆரம்பித்தனர். தொலைக்காட்சி, சமூக வலைத்தளங்கள் என எல்லாவற்றிலும் ‘கோ கிரீன்’, ‘குளோபல் வார்மிங்’ன்னு சர்ச்சை எழ ஆரம்பிச்சது.

அதன் பிறகுதான் எங்களுக்கு அதனுடைய உண்மையான விபரீதம் புரிஞ்சது. இது குறித்த ஆராய்ச்சில இறங்கினேன். பிளாஸ்டிக் பொருட்கள் எவ்வளவு நாள் மண்ணில் புதைந்து இருந்தாலும் அது மக்காது என்பதே அப்போது தான் எனக்கு தெரிந்தது. இந்த மக்காத பிளாஸ்டிக் பொருட்களால் நம்முடைய சுற்றுப்புறச்சூழலில் பாதிப்பு ஏற்படுவது மட்டும் இல்லை. இவை அனைத்தும் கழிவுகளாக மாதிரி கடல்ல போய் தேங்குகிறது. அது கடல் வாழ் உயிரினங்கள் பெரிதும் பாதிக்கிறது, என்ற உண்மை புரிந்த போது என் உச்சி மண்டையில் பெரிய சுத்தியால் அடித்தது போல் இருந்தது. அதுமட்டும் இல்லை, இந்த கழிவின் காரணமாக மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் பலநோய்களின் பாதிப்பு ஏற்படுவதையும் தெரிந்து கொண்டேன். இவை கழிவுகளாக பூமியில் தேங்குவது மட்டுமில்லை. அதிக வெப்ப சலனத்தின் காரணமாக உருகவும் செய்யும். இந்த நிலை தொடர்ந்தால், நம் நாடு வளம் இழந்து ஒரு கட்டத்தில் கொடிய நோயின் பாதிப்புகளை எதிர்கொள்ள வேண்டும் என்று தோன்றியது. இதை தடுக்க ஏதாவது செய்யணும்னு மட்டும் தோன்றியது. என்னால் முடிந்தது ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைச்சேன். அதற்கு ஒரே தீர்வு பிளாஸ்டிக்கான மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும். அப்பத்தான் இந்த நிலை மாறும்ன்னு நானும் என் மனைவியும் முடிவு செய்தோம்’’ என்ற சுஹாசன், ‘சேவ் குளோப்’ என்ற நிறுவனத்தை

துவங்கியுள்ளார்.

‘‘நூற்றில் பத்து பேராவது புற்றுநோயால் பாதிப்புக்கு ஆளாகிறார்கள். அதற்கு முக்கிய காரணங்களில் பிளாஸ்டிக் பயன்பாடும் ஒன்று. நாம் சாப்பிடும் உணவிலும் பிளாஸ்டிக் கலந்திருக்கு. சாப்பாட்டில் இல்லை, ஆனால் சாப்பிட பயன்படுத்தும் பொருட்களில். அதாவது வாழை இலைகளுக்கு பதில் பாலிதீன் கவரை தான் பயன்படுத்தி வந்தாங்க. கடையில் வாங்கும் பொருட்களையும் பிளாஸ்டிக் கவரில் தான் கட்டி தராங்க. இப்போது அதை பயன்படுத்துவதற்கு தடை போடப்பட்டு இருந்தாலும், சில இடங்களில் இன்றும் பயன்படுத்துவதை நாம் காண முடிகிறது. குறிப்பாக சாலையோர கடைகளில். சூடாக நாம் உணவினை பிளாஸ்டிக் கவரில் வைத்து சாப்பிடும் போது பிளாஸ்டிக் உருகி, அதில் உள்ள நச்சுக்களையும் சேர்த்து உணவுடன் ேசர்ந்து உண்கிறோம். இது நாளடைவில் பெரிய பிரச்னையை ஏற்படுத்தும். அதே போல் நாம் பயணம் செய்யும் போதும் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை தான் பயன்படுத்துகிறோம். கார், ரயில் எந்த பயணமாக இருந்தாலும் தண்ணீர் என்றால் பிளாஸ்டிக் பாட்டில்கள் தான் நினைவிற்கு வரும். இந்த பாட்டில்களும் மிகவும் தரம் குறைந்த பிளாஸ்டிக் பொருட்களால் தயாரிக்கப்படுகின்றன. அதை நாம் ஒரு முறை பயன்படுத்திவிட்டு தூக்கி போடுகிறோம்.

அவ்வாறு தூக்கிப் போடப்படும் பாட்டில்கள் கழிவுப் பொருட்களாக மாறி நம்முடைய சுற்றுப்புறச் சூழலை மிகவும் பாதிக்கிறது. மேலும் காரில் பயணம் செய்யும் போது பாட்டில்களில் இருந்து கார்பன்டை ஆக்சைட் வெளியாகும். இவ்வாறு பல வழிகளில் நாம் அன்றாடம் பிளாஸ்டிக்குடன் உறவாடிக் கொண்டு இருக்கிறோம்’’ என்றவர் இதற்கான மாற்றினை குறித்து ஆய்வு செய்ய துவங்கியுள்ளார்.‘‘நம்ம தாத்தா பாட்டி காலத்தில் டீ வாங்க தூக்கு தான் கொண்டு போவோம். இப்போது அது பிளாஸ்டிக் கவராக மாறிவிட்டது. இந்த ஒரே காரணம் தான் அவர்கள் ஆரோக்கியமாக வாழ. அதன் அடிப்படையில் பல ஆராய்ச்சிக்கு பிறகு 2011ல் இந்த நிறுவனத்தை தொடங்கினோம். பிளாஸ்டிக் விபரீதம் குறித்து சின்னச் சின்ன ஒர்க் ஷாப் நடத்தினோம். இதற்கான மாற்று ஏற்பாடா ஸ்பூன், பை, பாத்திரங்கள் எல்லாம் தயாரிச்சோம். பார்க்க பிளாஸ்டிக் மாதிரி தான் இருக்கும். ஆனால் அவையும் மக்கிப் போகும் என்பதற்கும் ஆதாரம் கிடைக்கலை. கரும்புக் கூழைக் கொண்டு பொருட்களை தயாரிக்க முடிவு செய்தோம். இது எளிதில் மக்கக்கூடிய பொருள். சுற்றுப்புறச் சூழலும் பாதிக்காது. மறுசுழற்சியும் செய்யமுடியாது. இதற்கிடையில் அரிசி உமியை மறு சுழற்சியும் செய்ய முடியும்னு தெரிஞ்சது’’ என்றவரின் அடுத்த கண்டுபிடிப்பு உமி தலையணை.

‘‘இது புதுசு இல்லை. நம் முன்னோர்கள் பயன்படுத்தியது தான். நெல்லில் இருந்து அரிசியை தனியாக பிரித்து எடுப்பதற்கு அதை நன்கு தரையில் போட்டு அடிப்பார்கள். அவ்வாறு அடிக்கும் போது, அரிசி தனியாகவும் உமி தனியாகவும் பிரியும். இந்த உமியில் மருத்துவ குணம் உள்ளது. குறிப்பாக கழுத்து மற்றும் முதுகு வலிக்கு மிகவும் நல்லது. என்னுடைய பாட்டி, கழுத்து வலி என்றால், உமியை லேசாக சூடு செய்து ஒரு மெல்லிய துணியில் கட்டி வலி உள்ள இடத்தில் ஒத்தடம் கொடுப்பாங்க. வலிக்கு அந்த சூடு இதமாக இருக்கும். மேலும் வலியும் குறையும். அதே கான்செப்ட் தான் நாங்க தலையணை மற்றும் நெக் காலர் இரண்டும் அறிமுகம் செய்து இருக்கிறோம். இது கழுத்துவலி மட்டும் இல்லாமல், தோள்பட்டை வலி மற்றும் முதுகு வலி இருந்தாலும் குறைக்க உதவும். சில சமயம் அதிக வேலை பளு காரணமாக மனஉளைச்சலால் கூட தலை மற்றும் கழுத்து வலி ஏற்படும். அதற்கும் இந்த தலையணை ஏற்றது. பொதுவாக நாம் பயன்படுத்தும் தலையணையில் கழுத்து சரியான நிலையில் இல்லாமல் இருப்பதால், கழுத்து மற்றும் தோள்பட்டையில் வலி ஏற்படும்.

அதுவே உமி தலையணையில் படுக்கும் போது, அது நம்முடைய கழுத்து பகுதியின் அமைப்பை மாறாமல் வைத்துக் கொள்கிறது. இதை தலையணையாகவும் பயன்படுத்தலாம். அல்லது லேப்டாப்பில் வேலை பார்க்கும் போது, முதுகு வலி, ஏற்படாமல் இருக்கவும் பயன்படும்’’ என்றவர் ஸ்பூன், கத்தி, போர்க், காபி மக், வாட்டர் பாட்டில், உடைகள் என அனைத்திலும் இயற்கையை புகுத்தி வருகிறார்.‘‘பொதுவா இந்த பொருட்கள் எல்லாம் பிளாஸ்டிக், ஸ்டீல், போர்சிலின், பீங்கான் கொண்டுதான் தயாரிக்கப்படும். ஆனா, அதில் தயாரிக்கப்படும் ஸ்பூனை சாப்பிட முடியாது. இதுக்கு பதிலா ஸ்பூன், போர்க், கத்திகளையும் நாம உணவுடன் சேர்த்து சாப்பிட்டா எப்படி இருக்கும்? இந்த கேள்விக்கான விடைதான் எடிபில் (edible)ஸ்பூன். ஆரம்பத்தில் இருந்தே இது புழக்கத்துல இருக்கு. ஆனா, பெரிய அளவுல யாரும் மார்க்கெட் செய்யலை. கோதுமை மற்றும் சோளமாவை தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்துக்கு பிசைந்து தேவையான வடிவம் அமைத்து பேக் (bake) செய்யணும். வெந்த பிறகு, சாப்பிடும் தன்மைக்கு மாறிடும். இந்த ஸ்பூனால் சாப்பிட்ட பிறகு, ஸ்பூனையும் கடிச்சு சாப்பிடலாம்! ஒருவேளை தூக்கி எறிந்தாலும் அது மக்கிதான் போகும். இதில் காரம் மற்றும் இனிப்பு என இரண்டு வகை உள்ளது. தேங்காய் நாரினால் பூந்தொட்டியும் உள்ளது. மூங்கிலில் காபி குடிக்கும் மக் மற்றும் கப் தயாரிக்கிறோம். சணல் பேப்பரில் பைகளையும் தயாரிக்கிறோம்.

தாகம், ஈகோ ஃப்ரண்ட்லி வாட்டர் பாட்டில். வெளியே செல்பவர்கள், மலை ஏறுபவர்கள், சுற்றுலா செல்பவர்கள், வேலைக்கு செல்பவர்கள் என எல்லா தரப்பு மக்களும் பயன்படுத்த ஏதுவாக இருக்க வேண்டும் என்று யோசித்தோம். அப்படி உருவானது தான் தாகம் வாட்டர் பாட்டில். அடுத்த கட்டமாக வாழைநார், கத்தாலை, அன்னாசிப்பழம், மூங்கில், சணல் கொண்டு உடைகளை தயாரிக்கும் எண்ணம் உள்ளது. பருத்தி உடைன்னு சொல்றாங்க, ஆனால் அதில் சிறிதளவு பாலியஸ்டர் கலந்து தான் நெய்றாங்க. பாலியஸ்டர் ப்ரீ உடைகளை தயாரிப்பதற்கான ஆய்வு நடந்துகொண்டு இருக்கிறது. இதை தொடர்ந்து தர்மோபிளாஸ்க். இதுவும் இகோ ஃப்ரண்ட்லி முறையில் தயாரிக்கப்பட்ட பிளாஸ்க். இதில் நாம் சூடாகவோ அல்லது குளிரந்த உணவினையோ வைக்கலாம். அதன் வெப்பநிலை நாலு மணி நேரம் வரை அப்படியே இருக்கும். நம்மை சுற்றியுள்ள இயற்கை பொருட்களை கொண்டே நம்ம சூழலை மாசு இல்லாம மாத்தலாம்...’’ என்ற சுஹாசன் ஐ.டி வேலையை ராஜினாமா செய்துவிட்டு முழுமையாக தன்னை ‘சேவ் குளோப்’புடன் இணைந்துக் கொண்டுள்ளார்.

-ஷம்ரிதி

Related Stories:

>