×

வெங்காயத்தின் உற்பத்தி பெருமளவு குறைந்த நிலையில் டெல்லியில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.100-க்கு விற்பனை

டெல்லி: வெங்காய உற்பத்தியில் மகாராஷ்டிர மாநிலம் முதலிடத்தில் உள்ளது. அந்த மாநிலத்தின் நாசிக் மாவட்டத்தில் உள்ள லாசல்கான் வெங்காய சந்தையில் இருந்துதான் நாடு முழுவதுக்குமான வெங்காயம் அனுப்பப்படுகிறது. அதற்கு அடுத்தபடியாக கர்நாடக மாநிலத்திலும் வெங்காயம் உற்பத்தி செய்யப்படுகிறது. இம்மாநிலங்களில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை கொட்டித் தீர்த்ததன் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் வெங்காய பயிர்கள் அழிந்தன. இதன் காரணமாக இந்தியாவில் வெங்காயத்தின் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் வெங்காயத்தின் உற்பத்தி பெருமளவு குறைந்த நிலையில், அதன் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.

நாளுக்கு நாள் வெங்காயத்தின் விலை அதிகரித்து வரும் நிலையில் தலைநகர் டெல்லியில் ஒரு கிலோ வெங்காயம் நூறு ரூபாயை எட்டியுள்ளது. கனமழையால் வெங்காயத்தின் வரத்து குறைந்ததாலும், இடைத்தரகர்கள் மூலம் பதுக்கப்படுவதாலும் நாடு முழுவதும் அதன் விலை உயர்ந்த வண்ணம் உள்ளது என்று கூறப்படுகிறது. பிற மாநிலங்களில் ஒரு கிலோ வெங்காயம் 70 ரூபாயில் இருந்து 80 ரூபாய் வரை விற்பனையாகி வரும் நிலையில், டெல்லியில் அதன் விலை 100 ரூபாயை எட்டியுள்ளது. அங்குள்ள மிகப்பெரிய காய்கறி சந்தையான ஆசாத்பூர் மண்டியில் வெங்காயத்தின் வரத்து குறைந்ததால் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கான், எகிப்து, ஈரான் மற்றும் துருக்கியில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் அமைச்சர்களுக்கு இடையிலான குழு கூட்டத்தில் வெங்காய தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு குறித்து விவாதிக்கப்பட்டது. அதில், வெங்காய தட்டுப்பாட்டை சமாளிக்கும் வகையில், ஈரான், துருக்கி மற்றும் எகிப்து போன்ற நாடுகளிலிருந்து வெங்காயம் இறக்குமதி செய்ய முடிவு செய்யப்பட்டது. உடனடி தேவைக்காக, முதல்கட்டமாக 80 கண்டெய்னர்களில் வெங்காயத்தை இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்பிறகு சந்தையில் ஏற்படும் தேவைக்கேற்ப வெங்காயத்தை இறக்குமதி செய்யவும், முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், அதிகரித்த வெங்காயத்தின் விலை மீண்டும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Delhi , onion production,low, the price,kilogram ,onion, Delhi
× RELATED சிறையில் இருந்து ஆட்சி நடத்த...