30 வருடங்களில் உலகில் நதிகளே இருக்காது!

நாம் பணத்தை விட அதிக அளவில் செலவு செய்வது தண்ணீரைத்தான். பொதுவாக சென்னை போன்ற மாநகரங்களில் ஒவ்வொரு வீட்டிலும் போர் போட்டு நிலத்தடி நீரை உறிஞ்சுகின்றனர். தவிர, கட்டடங்கள் கட்டுவதற்கு, வணிக வளாகங்கள், திரையரங்குகள் என மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களில் எல்லாம் நிலத்தடி நீர்தான் தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்கிறது.

இந்நிலையில் ‘‘இன்னும் முப்பது வருடங்களில் ஆயிரக்கணக்கான நதிகளும் ஓடைகளும் காணாமல் போய்விடும் அல்லது தங்களின் செயல்பாட்டை இழந்துவிடும்...’’ என்று எச்சரிக்கை செய்கிறது ‘நேச்சர்’ இதழில் வெளியான கட்டுரை ஒன்று. ‘‘உலகம் முழுவதும் அளவுக்கதிகமாக நிலத்தடி நீரை பம்ப் வைத்து உறிஞ்சுவதுதான் நதிகளின் அழிவுக்கு முக்கிய காரணம்...’’ என்று அந்தக் கட்டுரை தெளிவாக எடுத்துரைக்கிறது.

ஏனென்றால் நதிகளின் செயல்பாட்டில் முக்கியப்பங்கு வகிப்பதே நிலத்தடி நீர்தான். வறட்சியின்போது கூட நதி பாய்வதற்கு உந்துசக்தியாக நிலத்தடி நீர்தான் இருக்கிறது. சமீப காலங்களில் டிரில்லியன் லிட்டர் அளவுக்கு தண்ணீரை பூமியிலிருந்து மனிதன் எடுத்துவிட்டான்.

இன்னும் எடுத்துக்கொண்டே இருக்கிறான். இதே நிலை தொடர்ந்தால் 2050ல் பல நதிகள் வற்றிப்போய்விடும். அந்த நதிகள் வற்றிப்போவதால் நதியை ஒட்டியிருந்த காடுகள், கிராமங்கள், விலங்குகள், பறவைகள் எல்லாமே பாதிப்படையும்.

‘‘நிலத்தடி நீரை எடுப்பது டைம் பாமை செட் செய்வதைப் போன்றது. இப்போது அதன் பாதிப்பு எதுவும் நமக்குத் தெரியாது. ஆனால், பத்து வருடங்களில் அதன் பாதிப்பு மெல்ல மெல்ல வெளிவரத் தொடங்கும். இப்போது வற்றிப்போன நிலையிலிருக்கும் நதிகளுக்குக் காரணம் அந்த நதி பாயும் சுற்றுவட்டாரத்தில் உள்ள நிலத்தடி நீரை உறிஞ்சியதுதான். நிலத்தடி நீரை எடுப்பது நமக்கு நாமே வைத்துக்கொள்ளும் டைம் பாம்...’’ என்கிறார் நதிகளை ஆய்வு செய்யும் நிபுணர் டே கிராப்.                      

த.சக்திவேல்

Related Stories:

>