ராமாயண கதாபாத்திரத்திற்கு ஒரு சிலை

நன்றி குங்குமம் தோழி

கேரளாவின் கொல்லம் மாவட்டம் சதாயமங்கலம் இப்போது மற்றொரு சுற்றுலாத் தலமாக உருவெடுத்துள்ளது. காரணம், அங்கு அமைக்கப்பட்டுள்ள ஜடாயு சிற்பம்தான் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. சமீபத்தில் திறக்கப்பட்ட இந்த ஜடாயு பூங்கா கடல் மட்டத்தில் இருந்து 1000 அடி உயரத்தில் உள்ளதால் வெளிநாட்டினர் பலரின் மலையேற்ற பயிற்சிக்கு தீனி போடுவதாகவும் உள்ளது.

ஜடாயு ராமாயண காவியத்தில் வரும் கழுகு என்ற கதாபாத்திரம். ஒரு பறவை. சீதையை கடத்தி சென்றபோது ராவணனை வழிமறித்தது இந்த ஜடாயு பறவைதான். அதன் உயிர் ஸ்தானம் இறக்கையில் இருப்பதை அறிந்து அதை வெட்டி ஜடாயுவை மண்ணில் சாய்த்தான் ராவணன். உயிர் விட்ட அந்த பறவைக்கு கேரள அரசு  பிரமாண்ட சிலை வைத்துள்ளது.

200 அடி நீளம், 150 அடி அகலத்தில் 75 அடி உயரத்தில் இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதனை திரைப்பட இயக்குனர் ராஜிவ் அஞ்சால் வடிவமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சிலை மட்டும் இல்லாமல், சிலை இருக்கும் இடத்தை சுற்றி 65 ஏக்கர் பரப்பளவில் பூங்காவும் அமைக்கப்பட்டுள்ளது. 100 கோடி மதிப்பீட்டில் வடிவமைக்கப்பட்டு இருக்கும் இந்த சிலையை தினமும் ஏராளமானோர் பார்வையிட்டு வருகின்றனர்.

மலை மேல் அமைக்கப்பட்டு இருப்பதால், இந்த சிலையை பார்வையிட செல்ல ரோப் கார் வசதியும் உள்ளது. மலை உச்சிக்கு சென்று ஜடாயுவை தரிசிக்க வேண்டும் என்பதால், வெளிநாட்டினர் டிரெக்கிங் முறையில் மலையில் ஏறி செல்கின்றனர். மலையேற்றம் மட்டுமல்லாமல், பூங்காவில் அருங்காட்சியகமும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 6டி திரையரங்கமும் உள்ளது.

அதில் ஜடாயு கதாபாத்திரம் பற்றி அறிந்து கொள்ளும் வசதியாக 10 நிமிடம் திரைப்படமும் காட்டப்பட்டு வருகிறது. மியூசியத்தில் ராமாயண கதாபாத்திரங்கள் குறித்த டிஜிட்டல் விளக்கம் அளிக்கப்பட்ட போர்டுகள் நம் அறிவுப்பசிக்கு தீனி போடுகிறது. இந்துக்கள் மட்டுமின்றி அனைத்து மதத்தினரும் இந்த சிலையை பார்வையிட ஆர்வமுடன் வந்து செல்கின்றனர். சுற்றிலும் மலைகள், பள்ளத்தாக்குகள், அழகிய அருவிகள் என பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

கடவுளின் தேசமான கேரளாவுக்கு கிடைத்த மற்றொரு சுற்றுலாத்தலம் இது. இங்கு யோகா மற்றும் ஆயுர்வேத மையமும் அமைந்துள்ளது. உலகின் மிகப்பெரிய பறவை சிற்பம் என்ற பெருமை ஜடாயு பெற்றுள்ளது. கடந்த 2006ல் தொடங்கி 12 ஆண்டுகள் நடைபெற்ற கட்டுமான பணிக்கு பிறகு இந்த பூங்கா திறக்கப்பட்டுள்ளது.

இங்கு டிரெக்கிங் எனப்படும் மலையேற்ற பயிற்சி செய்ய வருபவர்களுக்கு என சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அவர்கள் பாறை மீது கயிறு கட்டி ஏறுதல், வலைப்பயிற்சி, போலீஸ் மற்றும் ராணுவப் பயிற்சிக்கு தயாராகும் இளைஞர்களுக்கும் இது சிறப்பானது. ஒட்டு மொத்தத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் மற்றும் பக்தர்களுக்கும் பொழுதுபோக்கும், ஆன்மிக சுற்றுலாத் தலம். முதல்வர் பினராய் விஜயன் இந்த சிலையை திறந்து வைத்தார்.

கோமதி பாஸ்கரன்

Related Stories: