கிலோ கணக்கில் ஆப்பிள், கேரட்... அப்படியே சாப்பிடும் சுல்தான்!

நன்றி குங்குமம் தோழி

தினமும் 15 கிலோ ஆப்பிள், 20 கிலோ கேரட் தான் மெனு. யாருடைய உணவு பட்டியல் இது என்று யோசித்து தலையை பிய்த்துக்கொள்ளாதீர்கள். கூடவே அப்பப்ப பருத்தி கொட்டை, புண்ணாக்கு, தேவைப்பட்டால் வைக்கோல் சாப்பிடுவேன் என்கிறார் சுல்தான்.நாட்டின்  மிகப்பெரிய எருமை என்ற பெருமையுடன் வலம் வரும் இந்த மாட்டின் விலை அதிகமில்லை... ஜஸ்ட் ரூ.21 கோடி தான். அரியானா மாநிலத்தை சேர்ந்த இந்த எருமை கால்நடைகளுக்கு அளிக்கப்படும் சாம்பியன் பட்டத்தையும் பெற்றுள்ளது. நரேஷ் பெனிவாலே என்பவர் தான் சுல்தானின் உரிமையாளர். இதன் உயரம் 5 அடி 11 அங்குலம். எடை 1,500 கிலோ.

முர்ரா இனத்தைச் சேர்ந்த சுல்தான் 8 வயதிலே சாதாரண எருமையை விட இருமடங்கு எடைக் கொண்டதாக இருந்தது. சுல்தானின் பளபளக்கும் தோலையும் ஆரோக்கியமான உடலையும் பராமரிக்கவே ஆட்கள் உள்ளனர்.  காலையில் எழுந்தவுடன் 5 கி.மீ வாக்கிங். அதை முடித்ததும் அவ்வப்போது இடைவேளை விட்டு 15 கிலோ ஆப்பிள், 20 கிலோ கேரட், 10 கிலோ தானியங்கள், 12 கிலோ இலை, தழை காய்கறிகள்... என சுல்தானின் உணவுப்பட்டியல் நீள்கிறது. சிற்றுண்டிக்காக மட்டுமே கோதுமை வைக்கோல், பருத்தி கொட்டை.   

மருத்துவச் செலவு, பராமரிப்பு, தீவன செலவு என ஆண்டுக்கு ரூ.2 லட்சம் செலவாகிறது. எதற்காக இந்த மாட்டுக்கு இவ்வளவு செலவு என்றால் சுல்தான்தான் அப்பகுதியின் இனப்பெருக்கவாதி. சுருக்கமாக சொன்னால் கட்டிளம் காளை. இந்த மாட்டின் விந்து ஒரு டோசின் விலை மட்டுமே 300 ரூபாய். இதன் மூலம் பிறந்த பல கன்றுகள் பல்வேறு மாநிலங்களில் உள்ளன.

மாடுகளின் இனவிருத்தியை மேம்படுத்தவும், விவசாயிகள் விந்தணு விற்பனை மூலம் வருமானம் ஈட்ட வேண்டும் என்ற நோக்கில் சுல்தானை பல கால்நடை கண்காட்சிகளுக்கும் கொண்டு சென்று காட்சிப்படுத்தி வருகிறார் அதன் உரிமையாளர். அப்படி ஒரு முறை கண்காட்சிக்கு சுல்தானை அழைத்து சென்ற போது, தென் ஆப்ரிக்காவை சேர்ந்த விவசாயி ஒருவர், ரூ.21 கோடிக்கு சுல்தானை விலைக்கு கேட்டுள்ளார். மறுத்துவிட்ட நரேஷ்... தன் எருமையின் விலை இவ்வளவா என வியந்துள்ளார்.

பா.கோமதி

Related Stories:

>