×

இந்தியாவில் தாக்குதல் நடத்த ஐஎஸ் தீவிரவாதிகள் முயற்சி : அமெரிக்க நுண்ணறிவுப் பிரிவு தகவல்

வாஷிங்டன்: ஐஎஸ்ஐஎஸ். தீவிரவாத அமைப்பு, கடந்தாண்டு இந்தியாவில் தற்கொலை குண்டு  வெடிப்பு தாக்குதல் நடத்த முயற்சித்து தோல்வி அடைந்ததாக அமெரிக்க  நுண்ணறிவு பிரிவு குழு இயக்குனர் தகவல் தெரிவித்துள்ளார். அமெரிக்க  செனட்டின் இந்திய வம்சாவளி உறுப்பினரான மேகி ஹாசன், கடந்த மாதம்  ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் சுற்று பயணம் மேற்கொண்டார்.  அப்போது ஆப்கானிஸ்தானில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பை சேர்ந்த ஐஎஸ்ஐஎஸ்-கே  எனப்படும் ஐஎஸ்ஐஎஸ்-கோரசான் பிரிவு அமெரிக்க ராணுவத்துக்கு அச்சுறுத்தலாக  இருப்பதாகவும் அவர்கள் அமெரிக்காவில் தாக்குதல் நடத்த  திட்டமிட்டு இருப்பதாகவும் அவருக்கு தெரிவிக்கப்பட்டது. அதன் பின்னர்  நாடு திரும்பிய அவர், ஆப்கானிஸ்தானை தவிர உலகின் வேறு பகுதிகளில்  தாக்குதல் நடத்தும் அளவுக்கு ஐஎஸ்ஐஎஸ்-கே பிரிவுக்கு பலம் உள்ளதா? சிரியா  மற்றும் ஈராக்கில் அமெரிக்கா அவர்களை வெற்றி பெற்ற நிலையிலும்  அமெரிக்காவுக்கு அச்சுறுத்தலாக இருப்பார்களா?’ என செனட் சபையில் கேள்வி  எழுப்பினார். அதற்கு அமெரிக்க நுண்ணறிவு பிரிவு இயக்குனர் ரசல் டிராவெர்ஸ்  பதில் அளித்து கூறியதாவது: ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் பிரிவுகளிலேயே  மிகவும் ஆபத்தானதாக கருதப்படுவது ஐஎஸ்ஐஎஸ்-கே எனப்படும் ஐஎஸ்ஐஎஸ்-கோரசான்  பிரிவாகும். இதில்  4,000 தீவிரவாதிகள் இருக்கக்கூடும். இந்த  குழுவானது இந்தியாவில் கடந்த ஆண்டு தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்த  முயன்றது. ஆனால் அந்த முயற்சி  தோல்வியில் முடிந்தது.

முன்னதாக,  கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அவர்கள் நியூயார்க் நகரில் தாக்குதல்  நடத்த முயற்சித்தனர். ஆனால், எப்பிஐ. தலையிட்டு அதனை தடுத்து நிறுத்தினர்.  எனவே, அமெரிக்கா மீது தாக்குதல் நடத்த வேண்டும் என்பது அவர்களுடைய  விருப்பமாக கூட இருக்கலாம்.
எனவே தான், ஐஎஸ்ஐஎஸ்-கே ஆப்கானிஸ்தானில்  உள்ள அமெரிக்கப் படைகளுக்கு அச்சுறுத்தலாக இருப்பதோடு, அமெரிக்காவிலும்  தாக்குதல் நடத்தும் திட்டத்துடன் உள்ளது. ஏறக்குறைய 18 ஆண்டுகளுக்கு  பின்னர், அமெரிக்கா தீவிரவாத அச்சுறுத்தலுக்கு ஆளாகி உள்ளது. 20க்கும்  மேற்பட்ட ஐஎஸ்ஐஎஸ் குழுக்கள், அல்கொய்தா மற்றும் அதனை சேர்ந்த அமைப்புகள்,  வெளிநாட்டு தீவிரவாதிகள் என உலகம் முழுவதும் தீவிரவாத அச்சுறுத்தல்  வளர்ந்து வருகிறது. ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில் நடந்த நூற்றுக்கும்  மேற்பட்ட தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ்-கே அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. மேலும்  கடந்த 2017 ஜனவரி முதல் அமெரிக்கா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் பாதுகாப்பு  படையினரோடு 250க்கும் மேற்பட்ட வன்முறை தாக்குதல்களையும் தொடுத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : militants ,India ,US , IS militants attempt , attack India,US intelligence report
× RELATED கேரள தங்கம் கடத்தல் பணம் காஷ்மீர்...