திமிங்கல வேட்டை

நன்றி குங்குமம் முத்தாரம்

திமிங்கலத்தைப் பற்றி பெரிய அறிமுகம் நமக்குத் தேவையில்லை. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அறிந்த மிகப்பெரிய கடல் வாழ் உயிரினம் அது. ஆரம்ப காலங்களில் தொண்ணூறுக்கும் மேற்பட்ட வகையிலான திமிங்கலங்கள் இருந்தன.  இப்போது எஞ்சியிருப்பது வெறுமனே 40 வகையிலான திமிலங்கள் தான். தவிர, பறவை பார்த்தல் மாதிரி சுற்றுலாத் துறையில் திமிங்கலம் பார்த்தல் என்ற ஒரு வணிகம் இருக்கிறது. ஆர்க்டிக் பிரதேசத்தைத் தவிர்த்து மற்ற இடங்களில் இருக்கும் கடலில் நடக்கும் இந்த வணிகத்தில் வருடத்துக்கு 2 பில்லியன் டாலர் டர்ன் ஓவர் ஆகிறது. இதற்காக ஐஸ்லாந்து, ஜப்பான், நார்வே போன்ற நாடுகளில் பிரத்யேகமான நிறுவனங்களே இயங்குகின்றன.

குறிப்பிட்ட தொகையைக் கட்டி விட்டால் போதும். உங்களைக் கடலுக்குள் அழைத்துச் சென்று திமிங்கலத்தை அருகில் இருந்து பார்க்கும் வாய்ப்பை உண்டாக்கித் தருவார்கள். நீங்கள் திமிங் கலத்தை தொட்டுக்கூட பார்க்க முடியும். திமிங்கலத்தைக் காயப் படுத்தி விடக்கூடாது என்பது மட்டுமே ஒரேயொரு நிபந்தனை. திமிங்கலம் பார்த்தல் தொழிலில் மட்டுமே உலகம் முழுவதும் 13 ஆயிரம் பேர் வழிகாட்டிகளாக இருக்கிறார்கள். கடந்த வருடம் மட்டும் ஒரு கோடிக்கும் அதிகமானோர் திமிங்கல தரிசனம் பெற்றிருக்கின்றனர். இந்தத் துறை ஒரு பக்கம் வளர்ச்சியடைந்து கொண்டிருக்க, இன்னொரு

பக்கம் திமிங்கல வேட்டை விஸ்வரூபம் எடுத்திருக்கிறது.

திமிங்கலத்தை வேட்டையாடுவது ஆதிகாலம் தொட்டே இருந்திருக்கிறது. 17 மற்றும் 18-ம் நூற்றாண்டுகளில் திமிங்கலத்தை அதன் கொழுப்புக்காக வேட்டையாடினார்கள். மின்சாரம் இல்லாத அந்தக் காலகட்டத்தில் திமிங்கல எண்ணெய் தான் விளக்கெரிக்கப் பயன்படுத்தப்பட்டது. இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் திமிங்கலங்களின் எண்ணிக்கை அருகி வருவது கண்டறியப் பட்டு, திமிங்கல வேட்டையை முறைப்படுத்த ‘சர்வதேச திமிங்கலப்பிடிப்பு அமைப்பு’ ஏற்படுத்தப்பட்டது. இருந்தாலும் அந்தச் சட்டங்களில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி நார்வே, ஜப்பான் போன்ற நாடுகள் திமிங்கல வேட்டையை இன்றும் தொடர்கின்றன. காரணம், ஜப்பானில் திமிங்கல இறைச்சி விரும்பி உண்ணப்படுகிறது. இரண்டாம் உலகப் போருக்குப் பின் அங்கே திமிங்கல நுகர்வு அதிகரித்துவிட்டது.

இதுபோக அறிவியல் ஆராய்ச்சிக்காக ஜப்பான் அரசு  திமிங்கலங்களை வேட்டையாடியது. இதற்கு சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித் தனர். அதனால் ஜப்பான் திமிங்கல வேட்டையில் ஈடுபடக்கூடாது என்று சர்வதேச நீதிமன்றம் 2014-ம் ஆண்டு தீர்ப்பு அளித்தது. அந்த ஒரு வருடம் மட்டும் வேட்டையை நிறுத்திய ஜப்பான், அடுத்த ஆண்டில் இருந்து வேட்டையை மீண்டும் தொடங்கியது. மறுபடியும் எதிர்ப்பு வர, கொஞ்ச நாட்களுக்கு அமைதி காத்த ஜப்பான், கடந்த ஜூலை மாதத்தில் இருந்து வர்த்தக அடிப்படையில் திமிங்கல வேட்டையை தொடங்கியுள்ளது.  இதற்கு இப்போது எதிர்ப்புக் குரல் வலுத்திருக்கிறது.

Related Stories: