நடமாடும் நூலகம்

நன்றி குங்குமம் முத்தாரம்

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ஓர் அரசுப் பள்ளி. மதிய உணவு இடைவேளை. ஆனால், குழந்தைகள் யாரும் சாப்பிடச் செல்லாமல் பள்ளிக்கு அருகிலிருக்கும் மரத்தடியில் கால் கடுக்க நிற்கின்றனர். வெகுநாட்கள் கழித்து சந்திக்கப்போகிற நண்பனுக்காக காத்துக்கொண்டிருப்பது போல அவர்களின் முகத்தில் ஏக்கமும் ஆர்வமும் பளிச்சிட்டன. அப்போது குழந்தைகளை நோக்கி டாடா ஏஸ் வண்டி வந்து கொண்டிருந்தது. வண்டி தங்களை நெருங்கி வருவதைப் பார்த்த குழந்தைகள் மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்தனர்.

அந்த வண்டியில் ஒரு கன்டெய்னர் பொருத்தப்பட்டிருந்தது. அதை பல்வேறு புத்தகங்களின் அட்டைப்படங்களும், ‘இதோ! உங்கள் புதிய நண்பர்கள்...’ என்ற வாசகமும் அலங்கரித்திருந்தன. உற்றுப்பார்த்தபிறகுதான் தெரிந்தது, அது வெறும் வண்டியல்ல; அழகான நடமாடும் நூலகம் என்று! குழந்தைகள் வரிசையாக நின்று தங்களுக்குத் தேவையான புத்தகங்களை முறைப்படி பெற்றுக்கொண்டு அதை நெஞ்சோடு அணைத்தபடி பள்ளி வளாகத்துக்குள் திரும்பினார்கள்.

இது எப்பவாவது நடக்கும் அரிய நிகழ்வு அல்ல. தினந்தோறும் திருவண்ணாமலையின் கிராமப் புறங்களில் இருக்கும் அரசுப் பள்ளியில் அரங்கேறும் அழகான நிகழ்வு! இந்த நடமாடும் நூலகம்,  ‘ரேகன்போக் இந்தியா ஃபவுண்டேஷன்’ என்ற தொண்டு நிறுவனத்துக்குச் சொந்தமானது. நடமாடும் நூலகம் மட்டுமல்ல, நடமாடும் மருத்துவமனை, மாலைநேரப் பள்ளி, சுற்றுச்சூழல் பராமரிப்பு... என பல்வேறு சமூகம் சார்ந்த சேவைகளில் இந்த தொண்டு நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.

‘‘நமக்கெல்லாம் கிடைத்த நல்ல விஷயங்கள் எதுவுமே நம் குழந்தைகளுக்குக் கிடைப் பதில்லை. எவ்வளவோ அருமையான விஷயங்களை நம்முடைய குழந்தைகள் இழந்து வருகின்றனர். அதில் முக்கியமானது வாசிப்புப் பழக்கம். சமுதாயத்தில் நிகழ்கின்ற பல்வேறு பிரச்னைகளுக்கு முக்கிய காரணமாக இருப்பது நம்மிடையே குறைந்துபோன வாசிப்புப் பழக்கம்தான். அதனால் குழந்தைகளிடம் அப்பழக்கத்தை ஏற்படுத்த ஏதாவது செய்ய வேண்டுமென்று தோன்றியது.

அதற்கான சிறுமுயற்சிதான் இந்த நடமாடும் நூலகம்...’’ மிளிரும் கண்களுடன் பேசுகிறார் மதன்மோகன். ரேகன்போக்கின் நிர்வாகி. பெரிய கார்ப்பரேட் நிறுவனத்தில் உயர்ந்த பதவியில், பை நிறைய சம்பளத்தில் இருந்தவர். வேலையை உதறிவிட்டு சமூக சேவையில் இறங்கிவிட்டார்.

தொகுப்பு: த.சக்திவேல்

Related Stories: