மணலி 18வது வார்டு பகுதியில் குண்டும் குழியுமாக மாறிய சாலை: வாகன ஓட்டிகள் அவதி

திருவொற்றியூர்: மணலி நெடுஞ்செழியன்  சாலை பழுதடைந்து குண்டும் குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் தினமும் விபத்திற்கு உள்ளாகின்றனர். மணலி மண்டலம் 18வது வார்டுக்குட்பட்ட நெடுஞ்செழியன் சாலையில் குடிநீர் லாரி, கார், மோட்டார் பைக் என தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. இங்குள்ள மாநகராட்சி உதவி பொறியாளர் அலுவலகம் எதிரே நெடுஞ்செழியன் சாலை பழுதடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக வாகனங்கள் சீராக செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். மேலும் இரவு நேரங்களில் இந்த சாலை வழியாக இருசக்கர வாகனத்தில் வருபவர்கள் பள்ளம் இருப்பது தெரியாமல் அதன் மீது வாகனங்களை செலுத்தும்போது நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர்.

பழுதடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி சாலை பராமரிப்பு பிரிவு அதிகாரிகளுக்கு வாகன ஓட்டிகளும், மண்டல பொறியியல் பிரிவு அதிகாரிகளும் பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. இதனால் இந்த இடத்தில் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாவது வாடிக்கையாக உள்ளது. எனவே இனியாவது நெடுஞ்செழியன் சாலையில் பழுதடைந்துள்ள இந்த பகுதியை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: