போனஸ், முன்பணம் தாமதம் கண்டித்து பஸ் டெப்போக்கள் முன் கண்டன ஆர்ப்பாட்டம்: போக்குவரத்து தொழிலாளர்கள் பங்கேற்பு

சென்னை: சென்னை, வடபழனி பேருந்து பணிமனையில் அதிகாலை 5 மணியளவில் வழக்கம்போல் தொழிலாளர்கள் பணிக்கு வந்தனர். பிறகு தங்களுக்கு பண்டிகை முன்பணம் மற்றும் போனஸ் வழங்காமல் தாமதப்படுத்திய  போக்குவரத்து நிர்வாகம் மற்றும் தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்றனர். பிறகு தொழிற்சங்கத்தினர் அளித்த பேட்டி: அனைத்து பொதுத்துறை நிறுவனங்களுக்கும் போனஸ் மற்றும் முன்பணம் வழங்கிய நிலையில் போக்குவரத்து துறைக்கு மட்டும் வழங்காமல் இழுத்தடித்து வந்த தமிழக அரசு நேற்று வழங்குவதாக ஒப்புக்கொண்டது. பண்டிகை காலங்களில் சிறப்பு பேருந்திற்காக கூடுதலாக பணியாற்றிவரும் போக்குவரத்து ஊழியர்களை தமிழக அரசு கண்டுகொள்ளாமல் இருந்து வருகிறது. எங்களது அனைத்து பிரச்னைகளுக்கும் போராட்டத்தின் மூலமாகவே தீர்வு பெற வேண்டிய நிலையில் உள்ளோம்.

தமிழகம் முழுவதும் 350க்கும் மேற்பட்ட பணிமனைகளில் போராட்டம் நடத்தப்பட்டது.இவ்வாறு கூறினர். இதேபோல் பெரம்பூர் பணிமனையின் தொமுச தலைவர் வேணுகோபால், சிஐடியு தலைவர் மதி ஆகியோர் தலைமையில் 60 பேர், வியாசர்பாடி பணிமனையில் தொமுச இணை செயலாளர் தங்கராஜ் தலைமையில் 30 பேர், மகாகவி பாரதி நகர் பணிமனையில் தொமுச இணை செயலாளர் பிரகாஷ் தலைமையில் 20 பேர் நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் விழுப்புரம், சேலம், திருச்சி, கோவை, மதுரை போன்ற அனைத்து இடங்களிலும் பணிமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

Related Stories: