வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு நோய் தடுப்பு பணியில் 42 மருத்துவ குழுக்கள்: அமைச்சர் தொடங்கி வைத்தார்

ஆவடி: திருவள்ளூர் மாவட்டத்தில் பருவமழையால் ஏற்படும் தொற்று நோய் தடுக்கும் பணியில் ஈடுபடுவதற்காக 42 மருத்துவ குழுக்களை ஆவடியில் அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கியதை முன்னிட்டு தொற்று நோய்கள் பரவுவது, அதனை கட்டுப்படுத்துதல் பற்றிய ஆய்வு கூட்டம் ஆவடி மாநகராட்சி கூட்ட அரங்கில் நேற்று முன்தினம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமை தாங்கினார். கூட்டத்தில் காய்ச்சல் பரவிய இடங்களில் நோய் தடுப்பு பணிகளை விரைந்து மேற்கொள்ளவும், ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை புகை தெளிப்பான் பணியினை மேற்கொள்ளவும் அறிவுரை வழங்கப்பட்டது.     முன்னதாக ஆவடியில் உள்ள தனியார் பள்ளிகள் 42 மருத்துவ குழுக்களையும் மற்றும் 10 புகை தெளிப்பான் வாகனங்களையும் தொற்றுநோய் தடுப்பு பணிக்காக பணியில் ஈடுபடுத்துவதற்கு கொடியசைத்து அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.

மேலும், தனிநபர் தோள்பட்டையில் ஒலிபெருக்கி பொருத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் சுமார் 50 நபர்களை நோய் பாதிக்கப்பட்ட பகுதிகளில் விழிப்புணர்வு மேற்கொள்ளும் பணிகளை தொடங்கி வைத்தார். பின்னர், ஆவடி அரசு பொது மருத்துவமனையை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு செய்து நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். மேலும் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு நிலவேம்பு குடிநீரை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஊரக தொழில் துறை அமைச்சர் பெஞ்சமின், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குநர் டாக்டர் குழந்தைசாமி, கூடுதல் இயக்குனர் டாக்டர் வடிவேலன், இணை இயக்குனர் டாக்டர் கிருஷ்ணராஜ், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் கூடுதல் இயக்குனர் டாக்டர் மாலதி, மருத்துவ கல்வி இயக்குனர் நாராயணபாபு, ஆவடி மாநகராட்சி ஆணையர் கிருஷ்ணமூர்த்தி, பொறியாளர் வைத்தியங்கம், சுகாதார அலுவலர் மோகன் உள்பட பல்வேறு துறைகளை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: