தீபாவளி பண்டிகை காலகட்டத்தில் இனிப்பு பண்டங்களுக்கு கட்டுப்பாடு :தரம் குறைந்தால் புகாரளிக்கலாம்,..மாவட்ட கலெக்டர் அறிவிப்பு

சென்னை: தீபாவளி பண்டிகை காலகட்டத்தில் இனிப்பு பண்டம் தயாரித்து விற்பனை செய்பவர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறை குறித்து கலெக்டர் சீத்தாலட்சுமி அறிவுரை வழங்கியுள்ளார். இதுகுறித்து சென்னை மாவட்ட கலெக்டர் சீத்தாலெட்சுமி வெளியிட்டுள்ள அறிக்கை: பண்டிகை காலம் தொடங்கியுள்ளதால் விதமான உணவு பதார்த்தங்களின் விற்பனைகளும் சூடுபிடிக்க துவங்கியுள்ளது. முக்கியமாக தீபாவளி மற்றும் கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகை காலத்தில் விதவிதமான இனிப்பு பலகாரங்கள்,  காரங்கள் மற்றும் கேக் போன்ற பேக்கரி உணவு பொருட்களை மக்கள் விரும்பி வாங்கி உண்பதும்,  சொந்த பந்தங்களுக்கு அன்பளிப்பு அளிப்பதும் நமது கலாச்சாரமாக விளங்கி வருகிறது.

* தீபாவளி பண்டிகையில் இனிப்பு மற்றும் கார பண்டங்களுக்கு சீட்டு நடத்துபவர்கள் உட்பட அனைத்து தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களும் உணவு பாதுகாப்புத்துறையில் பதிவு செய்து உரிமம் பெற்றும் மக்களுக்கு விநியோகம் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

* இனிப்பு கார வகைகளை தயாரிக்க பயன்படுத்தப்படும் சமையல் எண்ணெய் மற்றும் நெய் விவரங்களை தகவல் பலகையில் குறிப்பிட்டு விற்பனை கூடத்தில் வைக்கப்பட வேண்டும்

* இனிப்பு மற்றும் காரவகைகளை பேக்கிங் செய்து  கொடுக்கும்போது உணவு சேமிப்புக்கு உரிய தரத்துடன் உள்ள பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த வேண்டும்.

* பண்டிகை காலத்தில் இனிப்பு வகையை பரிசு பேக்கிங் செய்யும்போது பாலால் செய்யப்பட்ட இனிப்பு வகைகளை மற்ற இனிப்பு பொருட்களுடன் கலந்து பேக்கிங் செய்து விற்பனை செய்யக்கூடாது.

* இனிப்புகளில் காலாவதி தேதி விவரத்துடன் இனிப்பு தயாரிக்க பயன்படுத்திய மூல பொருட்கள் மற்றும் ஒவ்வாத பொருட்கள்  சேர்க்கப்பட்டிருப்பின் அதன் விபரங்களை அச்சிட வேண்டும்.

* இனிப்பு வகைகளை தயாரிக்க பயன்படுத்தப்படும் நீரின் தரத்தினை அறியும் பொருட்டு பகுப்பாய்வு சான்றிதழ் பெற்று இருத்தல் வேண்டும்.

* வியாபாரம் முடிந்தவுடன் உபகரணங்கள் மற்றும் பாத்திரங்களை கழுவி சுத்தம் செய்து பூஞ்சை தொற்று ஏற்படாதவாறு உலர வைத்தல் வேண்டும்.

* உணவு கையாளும் மற்றும் பரிமாறுதல் பணியை செய்பவர்கள் கையுறை மற்றும் தலைக்கவசம், மேலங்கிகள் அணிய வேண்டும்.

* உணவு கையாளுதல் பணியாளர்கள் தூய்மையான ஆடைகள் அணிந்து நகங்களை வெட்டி சுத்தமாக இருத்தல் வேண்டும். பணியினை தொடரும் முன்பும், கழிவறையை பயன்படுத்திய பின்பும் சோப்பு போட்டு கையை சுத்தம் செய்தல் வேண்டும். தொற்று நோயால் பாதிக்கப்பட்ட நபரை பணிபுரிய அனுமதித்தல் கூடாது.

* உணவு பொருட்களை கையாளுபவர்கள் உடல் தகுதியுடன் மருத்துவசான்றிதழ் பெற்றிருத்தல் வேண்டும்.

* பண்டிகை காலங்களில் தற்காலிக உணவு கூடங்கள்/திருமண மண்டபங்கள்/வீடுகள் ஆகிய இடங்களில் ஆர்டரின் பேரில் விற்பனைக்காக தயாரிக்கப்படும் இனிப்பு மற்றும் கார வகைகளுக்கு  உணவு பாதுகாப்பு சட்ட விதிகளின் படி உரிமம் அல்லது பதிவுச்சான்றிதழ் பெற்று விற்பனை செய்ய வேண்டும்.

* உணவு தயாரிப்பில் கலப்படமான பொருட்களையோ, அனுமதிக்கப்பட்ட அளவிற்கு அதிகமான நிறமிகளையோ உபயோகிக்கக் கூடாது.  மீறுவது கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

* உணவு பொருட்களுக்கு, விபரச்சீட்டு இடும்போது தயாரிப்பாளரின் முழு முகவரி, உணவு பொருளின் பெயர், தயாரிப்பு (அ) பேக்கிங் செய்யப்பட்ட தேதி, சிறந்த பயன்பாட்டு காலம் (காலாவதியாகும் காலம்) சைவ மற்றும் அசைவ குறியீடுகளை அவசியம்  குறிப்பிட  வேண்டும்.  

* உணவு பொருட்களை  ஈக்கள், பூச்சிகள் மற்றும் கிருமி தொற்று இல்லாத சுகாதாரமான சூழலில் மக்களுக்கு  விற்பனை செய்ய வேண்டும்.

* பண்டிகை காலத்தில் மட்டும் பலகாரங்கள் தயாரிப்பவர்கள் உட்பட அனைத்து தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களும் உடனடியாக உணவு பாதுகாப்பு அலுவலகத்தினை தொடர்பு கொண்டு உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006ன் கீழ் தங்களது வணிகத்தினை பதிவு செய்து உரிமம் பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

* தீபாவளி பண்டிகை முன்னிட்டு எண்ணெய், நெய், இனிப்பு, கார வகைகள், மாவட்டம்தோறும் உணவு பாதுகாப்பு துறையால் உணவு மாதிரி எடுக்கப்பட்டு அரசு பகுப்பாய்வு கூடத்தில் ஆய்வு செய்யப்படுகிறது.

* பொதுமக்களும், பண்டிகை காலங்களில் பலகாரங்கள் வாங்கும்போது உணவு  பாதுகாப்பு துறையில் பதிவு  பெற்ற நிறுவனங்களில் மட்டும் வாங்குமாறும்,  பேக்கிங் செய்யப்பட்ட பொருட்களை விபரச்சீட்டு இருந்தால் மட்டும் வாங்கி உபயோகிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும், இதுதொடர்பான புகார் இருப்பின் சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறையின் நியமன அலுவலர் அவர்களிடம் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் பொதுமக்கள் உணவுப்பொருள் சம்பந்தமாக 94440 42322 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம்.

Related Stories: