எழும்பூர் கண் மருத்துவமனையில் புதிய கட்டிடத்துக்கு 65 கோடி ஒதுக்கீடு: ஜனவரி முதல் பணி தொடங்க முடிவு

சென்னை: எழும்பூர் கண் மருத்துவமனை வளாகத்தில் 65 கோடியில் 8 மாடி கொண்ட புதிய கட்டிடம் கட்ட தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.லண்டனில் உள்ள மார்ஃபீல்டு மருத்துவமனைதான் உலகின் முதல் கண் மருத்துவமனை. அதன் பிறகு, 1819ம் ஆண்டு ஜூலை மாதத்தில் டாக்டர் ராபர்ட் ரிச்சர்ட்சன் என்பவரால் சென்னையில் கண் மருத்துவமனை தொடங்கப்பட்டது. ஆசியாவிலேயே முதல் கண் மருத்துவமனை ஆரம்பத்தில் ராயப்பேட்டையில் செயல்பட்டது. பிறகு, இடப்பற்றாக்குறை காரணமாக எழும்பூரில் உள்ள இடத்துக்கு 1844ம் ஆண்டில் மருத்துவமனை மாற்றப்பட்டது. இங்கு மொத்தம் 478 படுக்கைகள் உள்ளன. தினமும் 1,000 வெளி நோயாளிகள் வந்து செல்கிறார்கள். 47 மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கிறார்கள். இங்கு  தினசரி 50 கண்புரை நீக்கும் அறுவை சிகிச்சைகள் நடக்கிறது. இரவில் ஒரு மருத்துவருடன் செயல்படும் பிரிவில் எல்லா நேரமும் சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.

இந்த மருத்துவமனையுடன் இணைந்து மருத்துவக்கல்லூரி உள்ளது. 1942ம் ஆண்டில் இருந்து கண் சம்பந்தமான மருத்துவப் படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த மருத்துவ கல்லூரியுடன் கூடிய மருத்துவமனை இடப்பற்றாக்குறையால் தவித்து வருகிறது. இதை தொடர்ந்து மருத்துவக்கல்வி இயக்குனரகம் பரிந்துரை ஏற்று பொதுப்பணித்துறை முதன்மை தலைமை பொறியாளர் ராஜாமோகன் தரை தளத்துடன் கூடிய 8 மாடி கொண்ட புதிய கட்டிடம் கட்டுவதற்கு திட்ட அறிக்கை தயார் செய்து அரசுக்கு அனுப்பி வைத்தார். இதையடுத்து புதிய கட்டுமான பணிக்கு 65.60 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தொடர்ந்து பொதுப்பணித்துறை சார்பில் ெடண்டர் விடப்பட்டு, ஒப்பந்த நிறுவனம் தேர்வு செய்யப்பட உள்ளது.

பிறகு அடுத்த ஆண்டு ஜனவரி முதல் கட்டுமான பணிகளை தொடங்கவும் பொதுப்பணித்துறை முடிவு செய்துள்ளது. இந்த கட்டிடத்தின் தரைதளத்தில் வெளிநோயாளிகள் சிகிச்சை பிரிவு மற்றும் அறுவை சிகிச்சை பிரிவு, முதல் தளத்தில் மருத்துவ இயக்குனர் அறை, மூன்று சிறப்பு துணை கண்பிரிவு, 2வது தளத்தில் நூலகம், சிறப்பு கண் மருத்துவ துணைப்பிரிவு, 3வது தளத்தில் ஸ்டோர் ரூம், ஆய்வக அறை, நர்ஸ், டாக்டர்கள் ஓய்வு  அறை, 4வது தளத்தில் வகுப்பறை, கருத்தரங்க கூடம், 5வது தளத்தில் கண் அறுவை சிகிச்சை அறை, 6வது தளத்தில் மருத்துவ ஆவண பாதுகாப்பு அறை, பேராசிரியர்கள் அறை, பயிற்சி அறை, ஏவி அறை அமைக்கப்படுகிறது. தற்போது, 6 மாடி கொண்ட கட்டிடம் மட்டுமே கட்டப்படுகிறது. அடுத்து வரும் காலங்களில் 2 மாடி கூடுதலாக கட்டப்படும் வகையில் இந்த கட்டுமான பணி மேற்கொள்ளப்படுகிறது என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Stories: