கழிவுநீர் கலந்த குடிநீர் வினியோகத்தை கண்டித்து காலி குடங்களுடன் மக்கள் மறியல்: கொருக்குப்பேட்டையில் பரபரப்பு

தண்டையார்பேட்டை: கொருக்குப்பேட்டையில் கழிவுநீர் கலந்த குடிநீர் விநியோகம் செய்வதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை ெகாருக்குப்பேட்டை, காரனேசன் நகர், கஸ்தூரிபாய் தெருவில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் குழாய்கள் மூலம் குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. கடந்த 6 மாதமாக இந்த குழாய்களில் குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதாக மக்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து புதிய குழாய்கள் அமைக்கப்பட்டது. ஆனாலும் குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவது அதிகரித்ததுடன் அப்பகுதி சாலைகளில் தண்ணீர் தேங்கி கிடந்தது. குப்பைக்கழிவுகளும் அதிகளவு குவிந்திருந்தன. இதனால் அப்பகுதியில் உள்ளவர்களுக்கு மர்மக்காய்ச்சல் மற்றும் தொற்றுநோய் பரவும் நிலை ஏற்பட்டது.

இதையடுத்து டேங்கர் லாரிகள் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்பட்டது. அந்த நீரும் கடந்த 2 நாட்களாக கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து குடிநீர் வாரிய அதிகாரிகளிடம் புகார் அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று, அப்பகுதி மக்கள் சரமாரியாக குற்றம்சாட்டுகின்றனர். இந்நிலையில் நேற்று காலை காலை 9 மணியளவில் குடிநீர் வாரிய அதிகாரிகளின் மெத்தன போக்கை கண்டித்து கொருக்குப்பேட்டை-எண்ணூர் நெடுஞ்சாலையில் 100க்கும் மேற்பட்ட மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தகவலறிந்து ஆர்.கே.நகர் போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட மக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்பகுதிக்கு தற்காலிகமாக 2 லாரிகளில் தண்ணீர் அனுப்பி வைத்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு அப்பகுதி மக்கள் கலைந்து சென்றனர்.

இந்த சாலை மறியலால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பள்ளி மாணவர்கள் மற்றும் அலுவலகங்களூக்கு செல்பவர்கள் பெரிதும் அவதிப்பட்டனர். அதேபோல் தண்டையார்பேட்டை, நெடுஞ்செழியன் நகர், அண்ணா தெரு, தமிழன் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கழிவுநீர் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு அப்பகுதி வீடுகள் மற்றும் சாலைகளில் குளம்போல் தேங்கி நிற்கிறது. இவற்றை அப்புறப்படுத்த வலியுறுத்தி நேற்று காலை ஐஓசி பேருந்து நிலையம் அருகே 100க்கும் மேற்பட்ட மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரிய பகுதி பொறியாளர் ஏழுமலை மற்றும் ஊழியர்கள் விரைந்து வந்து அப்பகுதியில் கழிவுநீர் அடைப்புகளை சரிசெய்யும் பணிகளில் ஈடுபட்டனர். இதனால் அங்கு ஒரு மணி நேரம் பரபரப்பு நிலவியது.

Related Stories: