இதுவரையில் சிறப்பான பணிக்காக மத்திய அரசிடம் இருந்து தமிழகத்திற்கு 96 விருதுகள்: அமைச்சர் வேலுமணி பேட்டி

புதுடெல்லி: தமிழக அரசு பல்வேறு துறைகளில் ஆற்றிய சிறப்பான சேவைக்காக இதுவரையில் 96 தேசிய விருதுகளை பெற்றுள்ளது என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி பெருமிதத்துடன் கூறினார்.ஊராட்சி அமைப்புகள் விருதுக்கான நிகழ்ச்சி டெல்லியில் மத்திய உள்ளாட்சித் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் அனைத்து மாநில ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர்களும் கலந்து கொண்டனர். தமிழகத்தின் சார்பாக மாநில உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி கலந்து கொண்டார்.  தமிழகத்திற்கான சிறந்த ஊராட்சிக்காக வழங்கப்பட்ட விருதை  அமைச்சர் வேலுமணி பெற்றுக் கொண்டார். இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் வேலுமணி கூறியதாவது: ஆறு ஊராட்சிகளுக்கு தேசிய விருது தற்போது வழங்கப்பட்டுள்ளது.இதில்  ஒட்டுமொத்தமாக தமிழகம் இதுவரை மத்திய அரசிடமிருந்து 96 தேசிய விருதுகளை பெற்றுள்ளது.

இது மாநிலத்திற்கு கிடைத்த பெருமையாகும்இதைத்தவிர மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்து ஒரு கோரிக்கை வைத்துள்ளேன். அதில்; தமிழகத்திற்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்ட நகர்ப்புறம், ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்காக நிலுவையில் உள்ள ₹2,029  கோடி நிதியை வழங்கவும், இயந்திர உற்பத்தி பொருட்களின் ஜிஎஸ்டி  வரியை 5 சதவீதமாகக் குறைக்கவும் குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும் கோவை மாவட்டத்தில் ஏராளமான திட்டங்களை செயல்படுத்த அரசு தொடர்ந்து பணிகளை  மேற்கொண்டு வருகிறது. அதேப்போல் கோவையில் இருந்து துபாய்க்கு விமான சேவையை அனுமதிக்க வேண்டும் என்றும் மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழகத்தை பொருத்தமட்டில்  உள்ளாட்சித் தேர்தலுக்கான ஏற்பாடுகளை மாநில  தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. இதில் அவர்கள் கேட்கும் உதவிகளை தமிழக அரசும் முழுமையாக செய்து கொடுத்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: