உச்ச நீதிமன்றத்தில் ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை வழக்கு விசாரணை நடக்கவில்லை: இன்று நடைபெற வாய்ப்பு

சென்னை: ராதாபுரம் சட்டப்பேரவை தொகுதியின் மறுவாக்கு எண்ணிக்கை வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரிக்கப்படவில்லை.கடந்த 2016ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைக்கு நடந்த தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் திமுக சார்பில் எம்.அப்பாவு, அதிமுக சார்பில்  இன்பதுரை போட்டியிட்டனர். இதில், இன்பதுரை 69,590 வாக்குகளையும், அப்பாவு 69 ஆயிரத்து 541  வாக்குகளையும் பெற்றனர். 49 வாக்கு வித்தியாசத்தில் இன்பதுரை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.இன்பதுரையின் வெற்றியை எதிர்த்து தி.மு.க வேட்பாளர் அப்பாவு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கடைசி மூன்று சுற்று வாக்குகள் மற்றும் தபால் வாக்குகளை நீதிமன்றத்தில் தாக்கல்  செய்து, அவற்றை உரிய அதிகாரிகள் முன்னிலையில் எண்ணி முடிக்க உத்தரவிட்டது. அதன்படி, வாக்கு எண்ணிக்கையும் முடிக்கப்பட்டு விட்டது.

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக இன்பதுரை தரப்பில் கடந்த 3ம் தேதி உச்ச  நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்  முறையீட்டு மனுவை விசாரித்து நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், ‘மறுவாக்கு எண்ணிக்கை நடத்தி முடிக்கப்பட்டாலும் அதன் முடிவை மட்டும் வெளியிட தடை விதிக்கப்படுகிறது,’ என தெரிவித்த  நீதிபதிகள், வழக்கை அக்டோபர் 23ம் தேதிக்கு ஒத்திவைத்து கடந்த 4ம் தேதி உத்தரவிட்டனர்.இந்த நிலையில், இந்த வழக்கு நேற்று உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதி அருண் மிஸ்ரா அமர்வில் பட்டியலிடப்பட்டு இருந்தது. ஆனால், நேற்றைய தினம் அருண் மிஸ்ரா இடம் பெற்ற அரசியல் சாசன அமர்வில் நிலங்களை கையகப்படுத்தும்  வழக்கு தொடர்பான விசாரணை நாள் முழுவதும் நடந்ததால், ராதாபுரம் தொகுதி வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவில்லை. இருப்பினும், பட்டியலில் இருந்து வழக்கு நீக்கப்படாமல் இருப்பதால் இன்று விசாரணைக்கு வரும் எனத்  தெரிகிறது.

   

Related Stories: