திண்டுக்கல் துணிக்கடையில் செல்லாத 10 பைசாவிற்கு டி-சர்ட் : முண்டியடித்தது கூட்டம்

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் உள்ள துணிக்கடையில் பழைய பத்து பைசாவுக்கு ரூ.200 மதிப்புள்ள டி-சர்ட் வழங்கப்பட்டது. இதனை மக்கள் போட்டி போட்டு வாங்கிச் சென்றனர்.அரசால் செல்லாது என அறிவிக்கப்பட்ட 5 பைசா, 10 பைசா நாணயங்களுக்கு சாப்பாடு, துணிகள் வழங்கி திண்டுக்கல்லில் பிரபலப்படுத்தி வருகின்றனர். அந்தவகையில் கடந்த வாரம் திண்டுக்கல்லில் உள்ள ஒரு பிரியாணி கடையில் பழைய  ஐந்து பைசாவுக்கு அரை பிளேட் சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது.  நேற்று திண்டுக்கல், சந்து கடை பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் துணிக்கடையில், பழைய பத்து பைசா நாணயம் கொண்டு வந்து கொடுத்தவர்களுக்கு ரூ.200  மதிப்பிலான டி-சர்ட் வழங்கப்பட்டது.

 தொடர்ந்து 500க்கும் மேற்பட்டோர் நேற்று அதிகாலை முதலே அந்த துணிக்கடை முன்பு குவியத் தொடங்கினர். முதலில் வந்து நீண்ட வரிசையில் நின்றிருந்த 200 பேருக்கு கடை சார்பில் டோக்கன் வழங்கப்பட்டது. அதன்பின் பழைய பத்து  பைசாவை வாங்கிக்கொண்டு டி-சர்ட் வாங்கினர். கடை உரிமையாளரிடம் கேட்டபோது, ‘‘பழைய நினைவுகளை புதுப்பிக்கும் வகையில் ஒரு முயற்சியாகத்தான் ரூ.200 மதிப்பிலான டி-ஷர்ட்டை 10 பைசாவிற்கு வழங்கினோம்’’ என தெரிவித்தார்.

Related Stories: