தீபாவளி முதல் மீனாட்சி கோயிலில் தினமும் 12 ஆயிரம் பக்தர்களுக்கே லட்டு: அனைவருக்கும் விநியோகிப்பதில் சிக்கல்

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தீபாவளி முதல் தினமும் 12 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டும் பிரசாதமாக லட்டு வழங்கப்பட உள்ளது. அனைத்து பக்தர்களுக்கும் வழங்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தீபாவளி (அக். 27) முதல் பிரசாதமாக லட்டு வழங்கப்படும் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. தினமும் 20 ஆயிரம் லட்டு தயாரிக்க கோயிலுக்குள் அமைந்துள்ள மடப்பள்ளி தேர்வு செய்யப்பட்டது.  இதற்காக அங்கு காஸ் சிலிண்டருடன் ராட்சத அடுப்பு வைக்க, தீயணைப்புத்துறை ‘ஆட்சேபனையில்லா சான்றிதழ்’ வழங்கவில்லையென தெரிகிறது.   கடந்த 2018, பிப். 2ம் தேதி இரவு மீனாட்சி அம்மன் கோயிலில் தீ விபத்து ஏற்பட்டது. தொடர்ந்து தற்போது லட்டு தயாரிக்க திட்டமிட்டுள்ள மடப்பள்ளியிலும் சிலிண்டர் காஸ் கசிந்து சமீபத்தில் தீவிபத்து ஏற்பட்டது. இந்த இரு தீ  விபத்துகளுக்கு பின் பாதுகாப்பு கருதி, ‘கோயிலுக்குள் அடுப்பு வைக்க வேண்டாம். வெளியே வைத்துக் கொள்ளுங்கள்’ என தீயணைப்புத்துறை அறிவுறுத்தியுள்ளது. இதனை கோயில் நிர்வாகம் ஏற்க மறுப்பதால், தீயணைப்புத்துறை அனுமதி  வழங்குவதில் இழுபறி நீடிக்கிறது.

லட்டு தயாரிப்பதற்காக செகந்திரபாத்தில் இருந்து 6 மெகா சைஸ் அடுப்பு, பெரிய அளவிலான மாவு அரைக்கும் இயந்திரம், 3 பெரிய உபகரணங்களை கோயில் நிர்வாகம் வாங்கியுள்ளது. இந்த உபகரணம் மூலம் ஒரு மணி நேரத்தில் 500  லட்டுகள் மட்டும்தான் தயாரிக்க முடியும். தொடர்ந்து 24 மணிநேரமும் செயல்பட்டாலும், 12 ஆயிரம் லட்டுகள் மட்டுமே தயாரிக்க முடியும்.  எனவே, முதல்கட்டமாக வரும் தீபாவளி முதல் தினமும் 12 ஆயிரம் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்க கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அம்மன் சன்னதியில் தரிசனம் முடித்து வெளியே வரும் பக்தர்களுக்கு இந்த லட்டு  வழங்கப்பட உள்ளது.இதுகுறித்து கோயில் நிர்வாகிகள் கூறும்போது, ‘‘திட்டமிட்டபடி தீபாவளி முதல் பிரசாதமாக பக்தர்களுக்கு லட்டு வழங்கப்படும். ஐயப்பன் சீசன், கோயில் திருவிழா உள்ளிட்ட நாட்களில் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். அப்போது, கூடுதல்  லட்டு தயாரிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்படும்’’ என்றனர். கோயிலுக்கு வரும் அனைவருக்கும் லட்டு வழங்கப்படும் என அறிவித்து விட்டு, தற்போது 12 ஆயிரம் பேருக்கு மட்டும் லட்டு வழங்கப்படுமென அறிவித்துள்ளது பக்தர்களிடையே ஏமாற்றத்தை அளித்துள்ளது.

Related Stories: