குமரியில் டாஸ்மாக் பாருக்கு 4 லட்சம் வீதம் வசூல்? ‘அமைச்சருக்கு 2 லட்சம் கொடுக்க வேண்டும்’: ‘வாட்ஸ்அப்’பில் அதிமுகவினரின் ஆடியோ வைரல்

நாகர்கோவில்:  கடைக்கு ரூ.2 லட்சம் வீதம் அமைச்சருக்கு கொடுக்க வேண்டும் என்று குமரி மாவட்ட அதிமுகவினர் இருவர் பேசும் ஆடியோ வாட்ஸ்அப்பில் வைரலாகியுள்ளது.கன்னியாகுமரி மாவட்டத்தில் 98 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இவற்றில் 68 கடைகளில் பார்கள் உள்ளன. இந்த முறை 55 கடைகளுக்கு பார் ஏலம் நடைபெற்றது. 10 கடைகளுக்கு வழக்கு நடைபெற்று வருவதால் பார் ஏலம் நடைபெறவில்லை.  ஏலம் போன கடைகளுக்கு பார் வைக்க வாடகை அதிகம் கேட்டு கட்டிட உரிமையாளர்கள் என்ஓசி கொடுக்காமல் இழுத்தடித்து வருகின்றனர். இதனால் பார் தொடங்குவதிலும் பல இடங்களில் பிரச்னைகள் ஏற்பட்டுள்ளது.இந்தநிலையில் பார்  கேட்டவர் ஒருவர் முன்கூட்டியே இடத்தை வாடகைக்கு எடுத்து வைத்திருந்த வேளையில் ஏலத்தில் அவருக்கு பார் கிடைக்கவில்லை. இருந்தபோதும் அதற்கான இடத்தை கொடுக்க மறுப்பதாலும், நான் ஓட்டல்  வைத்துக்கொள்வேன் என்று கூறி மறுப்பதும், கட்டிட உரிமையாளரை கடை எடுத்தவர்கள் சென்று மிரட்டியுள்ளதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதுதொடர்பாக அதிமுகவினர் இருவரிடையே ஏற்பட்ட விவாதமும், அதில் பாருக்கு ரூ.2 லட்சம்  வீதம் அமைச்சருக்கு கொடுக்க வேண்டும் என்று அதிமுக நிர்வாகி பேசும் ஆடியோ, வாட்ஸ்அப்பில் வெளியாகி உள்ளது. அதன் விவரம் வருமாறு:அதிமுக நிர்வாகி:

அண்ணே சொல்லுங்க...

பார் கேட்டவர்: நீங்க கடை கொடுத்த ஆளுகள் எங்கள் ஆட்களிடம் மிரட்டுகின்றார்களே.. என்ன குழப்பம்?

அதிமுக நிர்வாகி: நீங்கள்தான் அவர்களை மிரட்டி வைத்துள்ளீர்கள்...

பார் கேட்டவர்: எனது பார்ட்டியின் வீட்டுக்கு போய் மிரட்டியுள்ளீர்களே, நான் ஒரு வருட வாடகை கொடுத்து கடையை எடுத்து வைத்துள்ளேன்.

அதிமுக நிர்வாகி: அவர்கள் தொழில் செய்ய இடம் கேட்டால் மிரட்டுவது என்பதா?

பார் கேட்டவர்: அவர்களுக்கு எனது தொழிலை பிடுங்கியா கொடுக்க வேண்டும்?

அதிமுக நிர்வாகி: நீங்கதான் பெரிய ஆளாச்சே, பார்ட்டி பண்ட் கேட்டால் கொடுக்க மாட்டீர்கள். நியாயமா இரண்டு கடைக்கு நான்கு நான்கு என்று 8 லட்சம் கேட்டோம். நீங்கள் நேரில் வர மாட்டீர்களே?

பார் கேட்டவர்: எனக்கு கடை கிடைக்காவிட்டாலும் பரவாவில்லை, எனது கடை பார்ட்டியை ஏன் தொந்தரவு செய்கிறீர்கள். தரமாட்டேன் என்று கூறியபிறகு மிரட்டுகிறார்கள்...

அதிமுக நிர்வாகி: கடை கேட்பதால் மிரட்டியதாக நினைக்காதீர்கள். பிராந்தி கடை நடக்காவிட்டால் அங்கு வேறு கடை இருக்காது.

பார் கேட்டவர்: நான் ஓட்டல் வைத்துக்கொண்டு போகிறேன். நான் ஸ்டார் ஓட்டல் கட்டுகிறேன். கஷ்டப்படுத்தாதீர்கள். எனக்கு தொழில் வேண்டும்.

அதிமுக நிர்வாகி: பிராந்தி கடை இல்லாவிட்டால் எப்படி ஓட்டல் நடக்கும். அரசுக்கு பணம் கட்டமாட்டீர்கள், பாரும் எடுக்க மாட்டீர்கள். ரோட்டில் கடை வைப்பேன் என்கிறீர்கள்.

பார் கேட்டவர்: முதலில் கேட்டபோது ஒரு கடைக்கு எத்தனை கேட்டீர்கள். அன்று இரண்டு கடைக்கும் சேர்த்து 4 ரூபாய் (ரூ.4 லட்சம்) கேட்டீர்கள்...

அதிமுக நிர்வாகி: இல்லை, கடைக்கு நான்கு கேட்டோம், மேலேயே இரண்டு கடைக்கும் சேர்த்து 8 (ரூ.8 லட்சம்) கொடுக்க வேண்டும்.

பார் கேட்டவர்: யாருக்கு?

அதிமுக நிர்வாகி: இடைத்தேர்தல் இருப்பதால் அமைச்சருக்கு கொடுக்க வேண்டும்.

பார் கேட்டவர்: நான் நடத்திய தொழில் இது, எனக்கு தொழில் வேண்டும்.

அதிமுக நிர்வாகி: நீங்க வட்டிக்கு கொடுப்பது எனக்கு தெரியும்.

பார் கேட்டவர்: உங்களுக்கு ரூ.10 கோடி வட்டிக்கு தரட்டுமா? (சிரிக்கிறார்) ஒரு பைசாவுக்கு. அண்ணா நான் உண்மையை கூறுகிறேன். நான் கடையை கொடுக்க மாட்டேன். இரண்டு கடையும் எனக்கு வேண்டும்.

அதிமுக நிர்வாகி: நேரில் வாருங்கள், வந்து பேசி முடிப்போம்.

பார் கேட்டவர்: நீங்கள் கேட்கும் தொகையையே கேட்டால் என்ன செய்வது?

அதிமுக நிர்வாகி: மூன்றரை லட்சம் கொடுத்து மற்றவர்கள் வாங்கவில்லையா? நீங்கள் அங்கு பெட்டிக்கடை வைத்தால், போலீசாரை வைத்து விரட்டுவோம்.

பார் கேட்டவர்: அது அவரவர் கழிவு (திறமை) போல் பார்த்துக்கொள்ளலாம்.இவ்வாறு உரையாடல் முடிகிறது.

Related Stories: