×

மேட்டூர் அணை நிரம்பியதால் 39,000 கன அடி நீர் வெளியேற்றம்: காவிரி கரையோரம் வெள்ள அபாயம்

மேட்டூர்: கர்நாடக அணைகளில் இருந்து நீர் திறப்பு அதிகரித்துள்ளதால், நடப்பாண்டில் 3வது முறையாக மேட்டூர் அணை நிரம்பியது. இதையடுத்து, அணையில் இருந்து உபரிநீர் போக்கியான 16 கண் மதகுகள் வழியாக தண்ணீர்  திறக்கப்பட்டுள்ளது. இதனால் காவிரிக்கரையோரம் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.கர்நாடக மாநிலம் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், கேரள மாநிலம் வயநாட்டிலும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள்  நிரம்பியதை தொடர்ந்து, அணைகளின் பாதுகாப்பு கருதி காவிரியில் உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர், தர்மபுரி மாவட்டம் பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல் வந்தடைகிறது. ஒகேனக்கல் காவிரியில் நேற்று முன்தினம், விநாடிக்கு 16  ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று மாலை 30 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இதனால், அருவிகளில் தண்ணீர்  ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனையடுத்து, அருவிகளில் குளிப்பதற்கும், பரிசல் சவாரி செய்வதற்கும் தடை  நீடிக்கிறது.
 அதேபோல், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. நேற்று முன்தினம், விநாடிக்கு 27 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 25 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.

இதையடுத்து நேற்று காலை  நடப்பாண்டில் 3வது முறையாக அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. இந்நிலையில் நேற்று இரவு 8 மணி நிலவரப்படி விநாடிக்கு 39 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து அதிகரித்தது. அணை முழுமையாக  நிரம்பியுள்ளதால், 39 ஆயிரம் கனஅடி நீருரும் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையில் இருந்து சுரங்க மின்நிலையம் மற்றும் அணை மின்நிலையம் வழியாக விநாடிக்கு 22,500 கனஅடியும், உபரிநீர் போக்கியான 16 கண் மதகுகள் வழியாக,  விநாடிக்கு 16,500 கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டது. அணையின் நீர்மட்டம் 120.20 அடியாகவும், நீர் இருப்பு 93.79 டிஎம்சியாகவும் உள்ளது.அணையில் இருந்து நீர்திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால், காவிரி கரையோரம் மற்றும் தாழ்வான பகுதியில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி வருவாய்த்துறையினர் தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை  விடுத்துள்ளனர். சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, தஞ்சை, திருவாரூர், கரூர், நாகை உள்ளிட்ட 12 மாவட்ட கலெக்டர்கள், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும்படி பொதுப்பணித்துறை மூலம் அறிவிப்பு அனுப்பப்பட்டுள்ளது.  மேலும், காவிரி கரையோரங்களில் வருவாய்த்துறை, காவல் துறை, பொதுப்பணித்துறை மற்றும் தீயணைப்பு படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


Tags : Mettur Dam ,Cauvery ,coast , overflowing, Mettur Dam,water discharge,
× RELATED மேட்டூர் அணை நீர்மட்டம் சரிவு