தூத்துக்குடியிலிருந்து மாலத்தீவுக்கு 200 டன் சரக்குடன் சென்ற தோணி கடலில் மூழ்கியது: தத்தளித்த மாலுமி உள்பட 9 பேர் மீட்பு

தூத்துக்குடி: தூத்துக்குடியில் இருந்து 200 டன் சரக்குகள் ஏற்றிக் கொண்டு  சென்ற தோணி மாலத்தீவு அருகே கடலில் மூழ்கியது.  கடலில் தத்தளித்த மாலுமி உள்ளிட்ட 9 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடியைச்  சேர்ந்தவர் ஜான்சி. இவருக்கு சொந்தமான  ஆர்க் ஆப் காட் என்ற தோணி  தூத்துக்குடியில் இருந்து மாலத்தீவுக்கு சரக்குகள் கொண்டு சென்று வந்தது.  வழக்கம் போல தூத்துக்குடியில்  இருந்து மாலத்தீவு அரசுக்கு   வெங்காயம், காய்கறிகள் மற்றும் தாமிர தாது ஏற்றிக்கொண்டு கடந்த  19ம் தேதி தோணி புறப்பட்டுள்ளது. இதில் தூத்துக்குடி  பாத்திமா நகரைச் சேர்ந்த ஜெயந்திரன் என்ற மாலுமி தலைமையில் பாத்திமாநகர்  மற்றும் ஜார்ஜ் ரோடு பகுதிகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் 9 பேர்  சென்றனர். இந்த தோணி கடந்த 22ம் தேதி மாலத்தீவு துறைமுகமான  மாலிக்கு  சென்றடைய வேண்டும். ஆனால் கடந்த 21ம் தேதி இரவு மாலியில் இருந்து 80  நாட்டிக்கல் மைல் தொலைவில் சென்றபோது தோணியின் கீழ் பகுதியில் தண்ணீர் புகுந்து மூழ்க  துவங்கியது.

இதையடுத்து தங்கள் பாஸ்போர்ட் உள்ளிட்டவற்றை எடுத்துக் கொண்டு  தோணியில் இருந்த 9 பேரும் கடலில் குதித்து தத்தளித்துள்ளனர். அப்போது  மாலத்தீவில் இருந்து தூத்துக்குடிக்கு சரக்குகள் ஏற்றுவதற்காக விபி  ப்ராக்ரஸ் என்ற சரக்கு  கப்பல் வந்துள்ளது. அதிலிருந்தவர்கள் இவர்கள் 9 பேரையும் மீட்டுள்ளனர். மேலும் அவர்கள் குறித்த தகவல்களை  மாலத்தீவு அரசுக்கும், இந்திய கடலோர காவல்படைக்கும் தெரிவித்து விட்டு  அவர்களை நேற்று தூத்துக்குடி பழைய  துறைமுகத்திற்கு  அழைத்து வந்தனர். அவர்கள் 9 பேரிடமும் மத்திய, மாநில உளவுத்துறையினர்,  கியூ பிராஞ்ச், மரைன் போலீசார், கடலோர காவல்படையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் கூறுகையில், ‘கடந்த 21ம் தேதியன்று மாலையில் மாலத்தீவு  அருகே சென்று கொண்டிருந்த தோணியின் கீழ் பகுதியில் ஏதோ மோதியது போல்  இருந்தது. அங்கு சென்று பார்த்தபோது கடல் நீர்  உள்ளே வந்து  கொண்டு இருந்தது. உடைப்பு சரி செய்ய முடியாத நிலையில் இருந்ததால் உயிரை  காப்பாற்றிக் கொள்ள கடலில் குதித்து நீந்தினோம். அப்போது அங்கு வந்த  கப்பலில் இருந்தவர்கள் எங்களை மீட்டனர். தோணியுடன் 200டன்னிற்கும் மேற்பட்ட  சரக்குகளும் மூழ்கி விட்டன’’ என்று தெரிவித்தனர்.

Related Stories: