மகாராஷ்டிரா, அரியானா சட்டப்பேரவை தேர்தல் இன்று வாக்கு எண்ணிக்கை: காலை 9 மணிக்கு முடிவுகள் தெரியும்

மும்பை: மகாராஷ்டிரா, அரியானா மாநில சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று பலத்த பாதுகாப்புடன் எண்ணப்படுகிறது. மகாராஷ்டிரா, அரியானா மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தலும், தமிழகம் உட்பட 18 மாநிலங்களில் 51 சட்டப்பேரவை தொகுதிகளில் இடைத்தேர்தலும், 2 மக்களவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் கடந்த 21ம் தேதி  நடைபெற்றது. 288  தொகுதிகள் கொண்ட மகாராஷ்டிராவில் காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் ஒரு அணியாகவும், பாஜ-சிவசேனா ஒரு அணியாகவும், நவநிர்மான் சேனா, வஞ்சித்பகுஜன் அகாடி, பகுஜன் சமாஜ்வாடி போன்ற கட்சிகளும் போட்டியிட்டன.  இத்தேர்தலில் 61.13 சதவீத வாக்குகள் பதிவாகின. அரியானாவில் ஆளும் பாஜ.வுக்கு எதிராக காங்கிரஸ், துஷ்யந்த் சவுதாலாவின் ஜனநாயக ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்து களம் கண்டுள்ளது. இதுதவிர, இந்திய தேசிய லோக் தளம், பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி கட்சிகளும்  போட்டியிட்டுள்ளன. இம்மாநிலத்தில் 68 சதவீத வாக்குகள் பதிவாகின. வாக்குப் பெட்டிகள் அனைத்தும் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், 2 மாநிலங்களிலும், இடைத்தேர்தல் நடந்த மாநிலங்களிலும் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. இதற்காக தேர்தல் ஆணையம் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது. வாக்கு எண்ணும் இடத்தில்  எந்தவித அசம்பாவிதமும் நடக்காமல் இருக்க தேவையான அளவு போலீசாரும், மத்திய பாதுகாப்பு படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். காலை 9 மணிக்கு பிறகு முன்னிலை நிலவரம் தெரியவரும்.ேதர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில் பெரும்பாலானவற்றில் இரு மாநிலங்களிலும் பாஜ கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. இதில், மகாராஷ்டிராவில் யார் ஆட்சியை பிடிக்கப் போகிறார்கள் என்பது பெரும்  எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அரியானாவில் 75 இடங்களை இலக்காக பாஜ நிர்ணயித்துள்ளது. மக்களவை தேர்தலில் 2வது முறையாக பாஜ அரசு அமைந்த பிறகு நடக்கும் முதல் சட்டப்பேரவை தேர்தல் என்பதால் இரு மாநில தேர்தல்  முடிவுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: