வடகர்நாடகாவில் மழை வெள்ளத்தால் கடும் பாதிப்பு

பெங்களூரு: கர்நாடகாவின் பெலகாவி மாவட்டத்தில் பெய்து வரும் மழை காரணமாக ஏற்கனவே மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கொய்னா அணையில் இருந்து வினாடிக்கு 2 லட்சம்  கனஅடி தண்ணீர் திறந்துள்ளதால் கிருஷ்ணா நதியில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கரையோர மக்கள் கடும் பீதியில் உறைந்துள்ளனர்.பெலகாவி - பாகல்கோட்டை - விஜயபுரா மாவட்டங்களை இணைக்கும் சாலை, கொப்பள் - எல்லம்மாதேவி சாலை முழுமையாக தண்ணீரில் மூழ்கியுள்ளதால் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது.

ரேணுகா எல்லம்மாதேவி கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தவர்கள் திரும்பி செல்ல முடியாமலும் வெளியூரில் இருந்து வந்தவர்கள் தரிசனம் பெற முடியாமல் தவித்து வருகிறார்கள். கிருஷ்ணா நதி அபாய கட்டத்தில் உள்ளது. சிக்கோடி  தாலுகாவில் உள்ள 10 மேம்பாலங்கள், ராய்பாக் தாலுகாவில் உள்ள குடச்சி மேம்பாலம் ஆகியவை மூழ்கியுள்ளன. விவசாயிகள் பயிர் செய்துள்ள நெல், கரும்பு, நிலகடலை, சோயாபீன்ஸ் ஆகியவை முழுமையாக நாசமாகியுள்ளது.வடகர்நாடக மாவட்டங்களில் மட்டுமில்லாமல் கல்யாண கர்நாடக பகுதியிலும் கடந்த நான்கு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. பல்லாரி மாவட்டத்தில் பாயும் துங்கபத்ரா நதியில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது.

Related Stories: