பிஎஸ்என்எல்லுக்கு 4ஜி உரிமம் சிறிய நிறுவனங்களும் இனி பெட்ரோல் பங்க் அமைக்கலாம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புதுடெல்லி: எண்ணெய் நிறுவனங்கள் அல்லாத தனியார் சிறு நிறுவனங்களும் பெட்ரோல் பங்க் அமைக்க அனுமதிக்கும் வகையில் விதிமுறைகளை தளர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதே போல், பிஎஸ்என்எல் தொலை  தொடர்பு நிறுவனத்திற்கு 4ஜி உரிமம் அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை கூட்டம் நேற்று நடந்தது. இதில், மத்திய அரசின் பொதுத்துறை தொலை தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல்லுக்கு 4ஜி உரிமம் வழங்குவது,  தனியார் சிறு நிறுவனங்களும் பெட்ரோல் பங்க் அமைக்க அனுமதி வழங்குவது உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இது குறித்து, கூட்டத்திற்குப் பின் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அளித்த  பேட்டியில் கூறியதாவது:தற்போது, இந்தியாவில் எரிபொருள் சில்லரை விற்பனைக்கான உரிமம் பெற ஒரு நிறுவனமானது ஹைட்ரோ கார்பன் ஆய்வு, உற்பத்தி சுத்திகரிப்பு, பைப்லைன்கள், என்என்ஜி டெர்மினல்கள் என ₹2,000 கோடி முதலீடு செய்ய வேண்டும்.  பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் 65,000 பெட்ரோல் பங்க்களை அமைத்துள்ளன. ரிலையன்ஸ், நயாரா, ஷெல் ஆகிய தனியார் நிறுவனங்கள் குறைவான அளவில் மட்டுமே பங்க்களை நடத்தி வருகின்றன.

இத்துறையில் முதலீட்டை பெருக்கவும், போட்டியை அதிகரிக்கவும் தற்போது பெட்ரோல் சில்லரை விற்பனை மையங்களுக்கான விதிமுறையில் தளர்வு செய்ய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, ஆண்டுக்கு 250  கோடி வர்த்தகம் செய்யும் நிறுவனங்கள் பெட்ரோல் பங்க் துறையில் ஈடுபடலாம். கிராமப்புறங்களில் 5% பங்க் அமைக்க வேண்டும்.பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் இரு நிறுவனங்களையும் அரசு மூடப்போவதாக வரும் செய்தியில் உண்மையில்லை. அதேபோல், இரு நிறுவனங்களில் இருந்து அரசின் பங்கை விலக்கிக் கொள்வதோ அல்லது ஏதேனும் ஒரு நிறுவனத்திற்கு  குத்தகைக்கு விடப் போவதோ கிடையாது. மாறாக இந்நிறுவனங்களை ஒழுங்குபடுத்தி லாபத்தில் இயக்கவே அரசு விரும்புகிறது.அதற்காக, பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு 4ஜி உரிமம் வழங்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. 2016ம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட விலையில், 4ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்படும். ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டுக்காக அரசு பட்ஜெட்  சலுகையில் இருந்து 4,000 கோடியை செலுத்தும்.அதே போல், தற்போது தனித்தனியாக உள்ள பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் இரு நிறுவனங்களும் ஒன்றாக இணைக்கப்படும். இந்நிறுவனங்களை நஷ்டத்திலிருந்து மீட்டு புத்துயிரூட்ட 29,937 கோடி நிதி வழங்கவும் அமைச்சரவையில் முடிவு  செய்யப்பட்டுள்ளது. இந்த நிதியில் 15,000 கோடி அரசு பத்திரங்கள் விற்பனை மூலமும், நிறுவனத்திற்கு சொந்தமான ₹38,000 கோடி சொத்துக்களை அடமானம் வைத்தும் திரட்டப்படும். இது அடுத்த 4 ஆண்டுகளில் செய்து முடிக்கப்படும்.

நிறுவனத்திலிருந்து விஆர்எஸ் ஊழியர்களுக்கு சிறப்பு ஓய்வூதிய தொகுப்பு வழங்கப்படும் என்றார்.

கோதுமை, பருப்புகளின் குறைந்தபட்ச விலை உயர்வு

அமைச்சரவையில் ரபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, கோதுமைக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு 85 உயர்த்தப்பட்டு 1,925 ஆகவும், பார்லி  குவிண்டாலுக்கு 85 அதிகரிக்கப்பட்டு 1,440 ஆகவும், மசூர் பருப்பு குவிண்டாலுக்கு ₹325 அதிகரிக்கப்பட்டு ₹4,800 ஆகவும், பிற பருப்பு வகைகள் 255 அதிகரிக்கப்பட்டு 4,875 ஆகவும், எண்ணெய் வித்துக்கள் ₹225 அதிகரிக்கப்பட்டு 4,425 ஆகவும்  நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், டெல்லியில் அடையாளம் காணப்பட்ட 1,797 அங்கீகாரமற்ற காலனிகளில் வசிக்கும் மக்களுக்கு அவர்கள் வசிக்கும் இடத்தை சொந்தமாக்கும் உரிமை வழங்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இதன் மூலம் 40  லட்சம் மக்கள் பயனடைவார்கள்.

Related Stories: