முறைகேடாக பண பரிவர்த்தனை புகார் டி.கே.சிவகுமாருக்கு நிபந்தனை ஜாமீன்: டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

பெங்களூரு: கர்நாடகா காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், இம்மாநில முன்னாள் அமைச்சருமான டி.கே,சிவக்குமார், முறைகேடாக  பண பரிவர்த்தனை செய்த புகார் தொடர்பாக கடந்த ஆகஸ்ட் மாதம் 31ம் தேதி  டெல்லியில்  உள்ள மத்திய அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார்.    அவரிடம் நான்கு நாட்கள் விசாரணை நடத்திய  பின் அமலாக்கத் துறை அதிகாரிகள் அவரை கைது செய்தனர். அவர் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.இந்த வழக்கில் ஜாமீன் கோரி சிவகுமார் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி  அஜய்குமார் குஹர், கடந்த மாதம் 26ம் தேதி மனுவை தள்ளுபடி செய்தார். இதை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில்  சிவக்குமார்  மேல்முறையீடு செய்தார். இதை நீதிபதி சுரேஷ் குமார்  அமர்வு விசாரித்தது. அப்போது, சிவக்குமாருக்கு ஜாமீன் வழங்க, அமலாக்கத் துறை எதிர்ப்பு தெரிவித்தது.

நான்கு நாட்கள் நடந்த  வக்கீல்கள் வாதம், கடந்த 17ம் தேதி முடிந்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு  ஒத்திவைக்கப்பட்டது. இந்த தீர்ப்பை நீதிபதி சுரேஷ் குமார்  நேற்று மாலை அறிவித்தார். அதில், ‘டி.கே.சிவகுமார் ஜாமீனில் வந்தால்,  வெளிநாட்டிற்கு தப்பிவிடுவார் என்ற  அமலாக்கத் துறையின் வாதம் ஏற்கும் வகையில் இல்லை. மேலும், வழக்கு தொடர்பாக  காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு போதிய அவகாசம்  கொடுக்கப்பட்டதால், இனியும் அவரை  சிறையில் வைப்பது சரியாக இருக்காது என்பதால்  நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்கிறேன்’’ என நீதிபதி அறிவித்தார். அவர் ‘₹25 லட்சத்துக்கான உத்தரவாதமும், 2 நபர்கள் உத்தரவாதமும் கொடுக்க  வேண்டும். விசாரணைக்கு அழைக்கும் போதெல்லாம் தவறாமல் வந்து  ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்,’ என்பது உள்பட நிபந்தனைகளையும் சிவக்குமாருக்கு  நீதிபதி விதித்தார்.

சிபிஐ கைது செய்யுமா?

 டி.கே.சிவகுமார் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளது  தொடர்பாக சிபிஐ.யில் புகார் கொடுக்கப்பட்டிருந்தது. அவர் மீதான புகாரை  விசாரணை நடத்த மாநில அரசும் சிபிஐ.க்கு அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில்,  இந்த  புகார் தொடர்பாக சிவகுமாரிடம் விசாரணை நடத்துவதற்காக சிபிஐ அவரை கைது செய்ய வாய்ப்பு உள்ளது. இதனால், அவருக்கு உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கிய போதும், சிறையில் இருந்து வெளியே வருவது சந்தேகம் என கருதப்படுகிறது.

Related Stories: