தொடர் நடவடிக்கை எடுத்தாலும் இவர்கள் திருந்த மாட்டார்களா?..நெல்லையில் மருத்துவ கழிவுகளை கொட்டி செல்லும் கேரள லாரிகள்

பேட்டை: நெல்லையில் மருத்துவ கழிவுகளை கேரளத்தினர் லாரிகளில் கெண்டு வந்து தினமும் கொட்டி செல்லும் நிகழ்வுகள் வாடிக்கையாகிவிட்டது. அந்த குப்பைகளை அவர்களே தீவைத்து கொளுத்துவதால் அதிலிருந்து வெளியாகும் நச்சு புகையால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். கேரள மாநில மருத்துவமனைகளில் இருந்து குறிப்பாக தனியார் மருத்துவமனைகளில் சேகரிக்கப்படும் மருத்துவ கழிவுகள் அங்குள்ள மருத்துவமனைகளில் நாள்தோறும் மலைபோல் குவிந்து விடுகிறது. இந்த கழிவுகளை மிகவும் பத்திரமாக அழிப்பது மருத்துவ மனைகளில் கடமை. ஆனால் அவர்கள் அப்படி செய்வதில்லை. இதுபோன்ற கழிவுகளை கேரளாவில் கொட்டினால் அங்குள்ள மக்கள் சும்மா விடமாட்டார்கள். இதற்கு ஒரே வழி தமிழ்நாடுதான் சிறந்த இடம் என கருதினர். ஆரம்ப காலங்களில் ஒரு சில லாரிகளில் மட்டும் இதுபோன்ற கழிவுகளை லாரிகளில் தமிழகத்திற்கு குறிப்பாக நெல்லை மாவட்டத்திற்கு அனுப்பி வைத்தனர். இங்கு மறைவான இடங்களில் கொட்டு விட்டு அவர்கள் யார் கண்ணிலும் படாமல் சென்று வந்தனர்.

இதை பார்த்த மக்கள் கழிவுகளை யார் கொட்டியது என்று தெரியாமல் நம்ம ஊர் மருத்துவமனைகளை திட்டி தீர்த்தார்கள். கேரளத்து கழிவுகள்தான் இங்கு வருகிறது என அவர்களுக்கு தெரியவில்லை. இது கேரளத்து மருத்துவமனை நிர்வாகத்திற்கு மிகவும் வசதியாக போய்விட்டது. தினமும் ஒரு சில லாரிகள் மட்டுமே வந்த நிலையில் நாட்கள் செல்லச்செல்ல லாரிகளில் எண்ணிக்கை அதிகமானது. தமிழர்கள் இளிச்சவாயர்கள் என ஒரு முடிவுக்கு வந்த அவர்கள்

இப்போது பட்டப்பகலில் கூட கழிவுகளை கொட்டி செல்கிறார்கள். குறிப்பாக கேரள எல்கை பகுதியான செங்கோட்டை வழியாகத்தான் கழிவுகளை ஏற்றிக்கொண்டு அதிக லாரிகள் வருகின்றன. பெயரளவிற்கு இங்குள்ள போலீசார் ஒரு சில லாரிகளை பிடித்து வழக்கு போடுவார்கள் அதோடு சரி. ஆனால் கழிவுகள் தொடர்ந்து டன் கணக்கில் வந்து கொண்டுதான் உள்ளன. செங்கோட்டை மட்டுமின்றி கடையம், நெல்லை பேட்டை ஆகிய இடங்களில் இதுபோன்ற கழிவுகள் அதிகம் கொட்டப்படுகிறது. முன்பெல்லாம் கழிவுகளை கொட்டி விட்டு சென்று விடுவார்கள்.

போலீசாரின் கெடுபிடியால் அதற்கு ஒரு மாற்று வழி கண்டு பிடித்தனர். இப்போது கொட்டப்படும் கழிவுகளை தீவைத்து கொளுத்தி விட்டு சென்று விடுகிறார்கள். கழிவுகளில் பற்றி எரியும் தீ, நாள் கணக்கில் எரிவதோடு அதிலிருந்து வெளியாகும் நச்சு புகை அந்தந்த பகுதியில் உள்ள மக்களை பெரிதளவு பாதிக்கிறது. இதுபோன்று இன்று அதிகாலை நெல்லை பழையபேட்டை-கரிசல்குளம் இணைப்பு சாலையில் கேரள கழிவுகளை கொட்டி சென்றுள்ளனர். அதற்கு தீவைத்து சென்றதால் எரிந்து கொண்டிருக்கிறது. இன்று காலையில்தான் இது அப்பகுதி மக்களுக்கு தெரியவந்தது. இங்கு இன்று மட்டுமல்ல, அடிக்கடி இப்படி கொட்டி செல்வதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள். இவர்கள் கொட்டி செல்லும் கழிவுகளால் அதன் நச்சு புகை அப்பகுதி முழுவதும் பரவி வருகிறது. ஏற்கனவே டெல்லி உள்ளிட்ட பெரு நகரங்களில் மாசுபட்ட காற்றால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே போன்று இங்கு கொட்டப்பட்ட கழிவுகளில் இருந்து வெளியாகும் புகையால் மக்கள் தொண்டை புகைச்சல், கண் எரிச்சல் போன்ற நோய் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறார்கள். வாகன ஓட்டிகளும் அந்த வழியாக செல்லமுடிவதில்லை. தமிழகத்தில் தொடர்ந்து கொட்டப்படும் கழிவுகளை தடை செய்ய இங்குள்ள அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது? என்ற கேள்வி மக்களிடம் எழுந்துள்ளது.

Related Stories: