கீழடி அகழாய்வில் கிடைத்த பீப்பாய் வடிவ குழாய்களின் பயன்பாடு குறித்து ஆய்வு: தொல்லியல் துறை விளக்கம்

திருப்புவனம்: திருப்புவனம் அருகே கீழடியில் தமிழக தொல்லியல் துறையின் 5ம் கட்ட அகழாய்வில் பீப்பாய் வடிவ குழாய்கள் கண்டெடுக்கப்பட்டது குறித்து தொல்லியல் துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 2ம் கட்ட அகழாய்வில் கிடைத்த பொருட்களின் ஆய்வுக்கு பின்னரே இந்த பீப்பாய் வடிவ குழாய்களின் பயன்பாடு குறித்து தெரியவரும் என்று தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிவகங்கை மாவட்டம், கீழடியில் ரூ.47 லட்சம் செலவில் 52 குழிகள் தோண்டப்பட்டு, ஐந்தாம் கட்ட அகழாய்வு பணிகள் நடந்தன. இதில் நீதியம்மாள் என்பவரது நிலத்தில் சுடுமண் குழாய்கள் கண்டெடுக்கப்பட்டன. இந்த சுடுமண் குழாயின் கீழ்பகுதியில் மூன்று பீப்பாய் வடிவிலான குழாய்கள் இருந்தன. ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டுள்ள பீப்பாய் வடிவ குழாய்களின் வாய்ப்பகுதியில் வடிகட்டி போன்ற அமைப்பு இருந்துள்ளது. வால் பகுதி இரண்டு பானைகளில் சென்று சேரும்படியாக அமைக்கப்பட்டிருந்தது. பீப்பாய் வடிவ குழாயும், சுடுமண் குழாயும் ஒன்றின் மேல் ஒன்றாக அமைந்திருந்தாலும் வேறு, வேறு பயன்பாட்டிற்கு பயன்படுத்தியிருக்க வேண்டும்.

ஏற்கனவே மத்திய தொல்லியல் துறையின் 2ம் கட்ட அகழாய்வின் போது கண்டுபிடிக்கப்பட்ட செங்கல் கட்டுமானத்தின் தொடர்ச்சியாக இது உள்ளது. 2,600 ஆண்டுகளுக்கு முன் தொழில்நுட்பமே இல்லாத காலத்தில், அன்றைய தமிழர்கள் தொழில்நுட்ப அறிவுடன் கட்டிடங்கள் கட்டியுள்ளனர். அதில் வடிகால் போன்ற அமைப்பையும் ஏற்படுத்தியுள்ளனனர் என தெளிவாகியுள்ளது. சுடுமண் குழாய் மற்றும் பீப்பாய் வடிவ குழாய் ஆகியவற்றின் பயன்பாடு மத்திய தொல்லியல் துறையின் 2ம் கட்ட அகழாய்வு முடிவு வெளியான பின்தான் இறுதியாக தெரியவரும். உலக அளவில் பண்டைய கால மனிதர்கள், வாழ்விடங்கள், வாழ்க்கை முறைகள் குறித்து ஆய்வு செய்யும் அறிஞர்கள் பட்டியலிட்டவற்றில் பெரும்பாலானவை கீழடியில் கிடைத்துள்ளன. எனவே உலக அளவில் தமிழர்கள் தான் மூத்த குடிமக்கள் என தெரியவந்துள்ளது. கீழடியில் 110 ஏக்கர் பரப்பளவில் அகழாய்வு நடைபெறும் போது மேலும் பல சான்றுகள் கிடைக்க வாய்ப்புண்டு என தொல்லியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

Related Stories: