இன்று (அக்.23) பீலே பிறந்த தினம் பிரேசிலின் ‘பிகில்’ பீலே..!

‘‘என்னால் நாட்டுக்கு பெருமை ஏற்படும் சூழல் ஏற்பட்டால், அதற்காக நான் எவ்வளவு சிரமங்களையும் ஏற்றுக்கொள்வேன். மிக கடுமையாக உழைப்பேன்...’’ - இப்படி கூறியவர்தான் கால்பந்து ஜாம்பவான்களிலேயே நம்பர் ஒன் என பாராட்டை பெற்ற பிரேசிலின் பிரபல கால்பந்து ஹீரோ எடிசன் அரன்டெஸ் டொ நாசிமென்டோ. இப்படி சொன்னால் மண்டை சுத்தும். சுருக்கமாக இவரை பீலே என்று குறிப்பிடலாம். சரி.. வாங்க அவரது சாதனை களத்தில் பயணிப்போம்.

பிரேசில் நாட்டின் டிரஸ்கார்கோஸில் அக்.23, 1940ல் பிறந்தவர் எடிசன் அரன்டெஸ் டொ நாசிமென்டோ.... ஸாரி.. பீலே. சிறுவயதில் விளையாட்டில் பெரிய அளவில் ஆர்வமில்லாதவராகத்தான் பீலே இருந்தார். ரேடியோவில் 1950 உலக கோப்பை இறுதிப்போட்டி வர்ணனையை பிரேசிலின் டிரெஸ் கராகோஸ் கிராம மக்கள் ஆர்வமுடன் கேட்டுக்கொண்டிருக்கின்றனர்.

பிரேசில் - உருகுவே அணிகள் மோதுகின்றன. ரத்தக்குழாய் வெடிக்கும் அளவுக்கு வெறித்தனமாக மேட்ச் ஓடிக் கொண்டிருக்கிறது. இறுதியில் உருகுவே 2-1 என்ற கோல் கணக்கில் பிரேசிலை வீழ்த்தி சாம்பியன் ஆனது.

அவ்வளவுதான்.. ரசிகர்கள் அழத்தொடங்கினர். டொன்டின்ஹோ என்பவரும் தனது சொத்தே பறிபோனது போல ஓவென அழுது கொண்டிருந்தார். அப்போது ஒரு கை ஆறுதலாக அவரை தொடுகிறது. ‘‘அழாதீங்க அப்பா... நான் நம்ம நாட்டுக்காக விளையாடி உலக கோப்பையை வாங்கித் தருகிறேன்... இது சத்தியம்’’ என்கிறான் அந்த 9 வயது சிறுவன். காலம் உருண்டோடுகிறது. 1958 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் 2 கோல்கள் அடித்து வெற்றி தேடித்தருகிறார் ஒரு 17 வயது இளைஞன். ஸ்வீடனை வீழ்த்தி பிரேசில் சாம்பியன் ஆனது. டொன்டின்ஹோ கதறி அழுகிறார். இம்முறை அது ஆனந்தக்கண்ணீர். அவர்தான் பீலே என்று சொல்லித்தான் தெரிய வேண்டுமா? (எத்தனை தமிழ் சினிமா பார்த்திருப்பீங்க).

உலகக்கோப்பை போட்டியில் விளையாடிய இளம் வீரர் என்ற சாதனையோடு பீலே, வீர நடை போட்டார். அந்த உலக கோப்பையில் 6 கோல்கள், 2வது போட்டியில் முதல் உலக கோப்பை கோல், பிரான்சுக்கு எதிராக அரை இறுதியில் ஹாட்ரிக், இறுதியில் 2 கோல்கள் என அந்த உலக கோப்பையை பீலேவே உயரத்திற்கு கொண்டு சென்றது. கால்பந்து அரங்கில் தவிர்க்க முடியாத வீரராக விளங்கினார். ஒரு இளம் கால்பந்து வீரருக்கு, ரியல் மாட்ரிட், மான்செஸ்டர் யுனைடெட் உள்ளிட்ட கிளப் அணிகளில் விளையாடுவதைத்தான் லட்சியமாக கருதுவார்கள். ஒப்பந்தத்தில் கையெழுத்து போட மாட்டோமா என ஏங்குவார்கள்.

ஆனால், அது போன்ற கிளப் நிர்வாகங்கள், பீலேவின் கையெழுத்துக்காக காத்திருந்தன. ஆனால், அந்தக்காலத்திலேயே லட்சக்கணக்கில் பணம், ஆடம்பர பங்களா, சொகுசு கார் என பல பீலேவுக்கு கிளப்கள் ஆசை காட்டின. ஆனால், தன் நாட்டை விட்டு போக விரும்பாத பீலே, தான் சிறுவயதிலிருந்து விளையாடிய சாண்டோஸ் அணியிலேயே தொடர்ந்தார். தனது கால்பந்து வாழ்க்கையில் 1,363 போட்டிகளில் விளையாடி 1,281 கோல்களை அடித்தவர். அது மட்டுமா? 1958, 1962, 1970களில் நடந்த 3 உலக கோப்பை போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பிரேசிலுக்காக 92 போட்டிகளில் விளையாடி 77 கோல்களை அடித்துள்ளார்.

இன்று பலர் தொழில்நுட்ப பயிற்சி பெற்று விளையாடும் பல ஷாட்களை அன்றே முயற்சித்து அசத்தியவர் பீலே. இன்று அவரது 79வது பிறந்தநாள். நாம் ஏற்கனவே குறிப்பிட்டபடி, பணத்துக்காக விளையாட்டு என்பதை விட, நாட்டின் பெருமைக்காக விளையாட வேண்டும் என்பதே அவரது லட்சிய கோலாக இருந்தது. இளம் வீரர்களுக்கு பீலே ஒரு மிகச்சிறந்த முன்னுதாரணம் என்றால் அது சத்தியமாக மிகையில்லை.

Related Stories: