செவிலியர் கவுன்சிலில் திருநங்கையின் பெயரை பதிவு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தமிழ்நாடு செவிலியர் கவுன்சிலில், திருநங்கையின் பெயரை மூன்றாம் பாலின பெண் என பதிவு செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செவிலியர் படிப்பை முடித்து தமிழ்நாடு செவிலியர் கவுன்சிலில் பதிவு செய்ய திருநங்கை ரக் ஷிகா ராஜ் என்பவர் விண்ணப்பித்தார். அப்போது மூன்றாம் பாலின பெண் என தன்னை பதிவு செய்யக்கோரி அளித்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மூன்றாம் பாலினத்தவரின் பதிவு குறித்த கவுன்சில் விதிகளில் திருத்தம் செய்ய இருப்பதாக தெரிவித்தார். மேலும் மனுதாரரை பொறுத்தவரை மூன்றாம் பாலின பெண் என பதிவு செய்ய இடைக்கால ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, தமிழ்நாடு செவிலியர் கவுன்சில் சட்ட விதிகளில் திருத்தம் கொண்டு வரும் வரை திருநங்கை ரக் ஷிகா ராஜின் பெயரை செவிலியர் கவுன்சிலில் தற்காலிகமாக பதிவு செய்ய உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.

Related Stories: