×

கர்நாடக பாஜக தலைவர் முனிராஜு கவுடாவிற்கு தேர்தலில் போட்டியிட விதிக்கப்பட்ட 3 ஆண்டு தடைக்காலத்தை 9 மாதங்களாக குறைத்தது தேர்தல் ஆணையம்

டெல்லி :  சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட கர்நாடக பாஜக தலைவர் முனிராஜு கவுடாவிற்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டுகள் தடைக்காலத்தை தேர்தல் ஆணையம் அதிரடியாக குறைத்துள்ளது.2014 மக்களவைத் தேர்தல் செலவுகள் பற்றிய கணக்கு விவரங்களை முறையற்ற வகையில் தாக்கல் செய்த குற்றத்திற்காக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட முனிராஜு கவுடாவிற்கு தேர்தல் ஆணையம் 3 ஆண்டுகள் தடை விதித்தது. இந்த 3 ஆண்டுகால தடையானது கடந்த ஜனவரி 9ம் தேதி முதல் தொடங்கியது.  

இந்நிலையில் கடந்த அக்டோபர் 17ம் தேதியன்று தேர்தல் ஆணையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கடந்த  செப்டம்பர் 9ம் தேதி முனிராஜு கவுடா மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 11வது பிரிவின் கீழ் முறையீடு செய்துள்ளார் என்றும் தேர்தலில் போட்டியிடும் தடை காலத்தை குறைக்குமாறு ஆணைக்குழு முன் கவுடா கோரிக்கை வைத்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் அக்டோபர் 9ம் தேதி அன்று தனது வழக்கை நேரில் ஆஜராகி வாதிட்டார் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் பிரிவு 11 ஆனது. தகுதி இன்மைக் காலத்தை நீக்குதல் அல்லது குறைத்தல் பற்றிச் சொல்கிறது. தேர்தல் ஆணையமானது, ஏதாவது காரணங்களின் அடிப்படையில், தகுதியின்மையினை நீக்கலாம் அல்லது அத்தகைய தகுதியின்மைக் காலத்தைக் குறைக்கலாம். முறையற்ற தேர்தல் செலவுகளை தாக்கல் செய்யப்பட்ட முந்தைய வழக்குகளில் தேர்தல் ஆணையம் தகுதியின்மை காலத்தை குறைத்துள்ளது.

எனவே முந்தைய முறையீட்டின் தீர்ப்பை மேற்கோள்காட்டி, முனிராஜு கவுடா சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் தடை காலத்தை 3 ஆண்டுகளில் இருந்து 9 மாதங்கள் 9 நாட்களாக தேர்தல் ஆணையம் குறைத்துள்ளது. இதே போன்று கடந்த சில நாட்களுக்கு முன்பு குற்ற வழக்கில் சிறைத்தண்டனை பெற்றதால் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட சிக்கிம் முதல்வர் பிரேம் சிங்குக்கு விதிக்கப்பட்ட 6 ஆண்டுகள் தடையை 13 மாதங்களாககுறைத்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.


Tags : Muniraju Gowda ,Election Commission ,BJP ,Karnataka , Legislative Assembly, Election, Muniraju Gowda, Election Commission, Lok Sabha, Election, Prem Singh
× RELATED கூடுதல் வாக்கு செய்தி முற்றிலும்...