இன்போசிஸ் நிறுவனத்தின் மீது செபி எனப்படும், இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் விசாரணை நடத்தும் என தகவல்

டெல்லி: இன்போசிஸ் உயரதிகாரிகள், நிறுவனத்தின் லாபத்தை, முறைகேடாக அதிகரித்து காண்பித்து, நெறிமுறையற்ற செயல்களில் ஈடுபடுவதாக கூறப்படும் புகார் குறித்து, செபி எனப்படும், இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் விசாரணை நடத்தும் என தகவல் வெளியாகியுள்ளது. இன்போசிஸ் ஊழியர்கள் சிலர், தங்கள் பெயரைக் குறிப்பிடாமல், நெறியோடு பணியாற்றும் ஊழியர்கள் எனத் தலைப்பிட்டு, அந்நிறுவன இயக்குநர் குழுவுக்கும், அமெரிக்க பங்குகள் மற்றும் பரிவர்த்தனை ஆணையத்திற்கும் கடந்த செப்டம்பர் 20ஆம் தேதி கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.

அதில், தலைமை செயல் அதிகாரி சலில் பரேக்  மற்றும் தலைமை நிதி அதிகாரி நிலஞ்சன் ராய்  ஆகியோர், லாபத்தை பெருக்குவதற்கும், குறுகிய கால ஆதாயத்திற்காகவும் இருவரும் இணைந்து, கணக்குவழக்குகளில் தில்லுமுல்லு செய்வதாக புகார் கூறப்பட்டுள்ளது. இன்போசிஸ் நிறுவனத்தின் மதிப்பை உயர்த்திக் காண்பிப்பதற்காக, இந்த தில்லுமுல்லுகளில் ஈடுபட்டிருப்பதாகவும், அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்த புகாரால், இன்போசிஸ் நிறுவன பங்குகள், நேற்று 17 விழுக்காடு அளவிற்கு சரிவை எதிர்கொண்டன. இந்த சரிவால் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பு 53,000 கோடி ரூபாய் அளவுக்கு குறைந்தது.

இந்நிலையில், இன்போசிஸ் நிறுவனத்தின் மீதான புகார் குறித்து, செபி எனப்படும், இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் விசாரணை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பங்குச்சந்தை ஒழுங்குமுறை அமைப்பான செபியின் விசாரணையில், புகார் உறுதியானால், இன்போசிஸ் நிறுவனத்தின் மீது கடும் நடவடிக்கை பாயும். ஏற்கனவே, கடந்த 2009ஆம் ஆண்டு, இதேபோன்று, நிறுவன வருவாயை மிகைப்படுத்தி காண்பித்து, 14 ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு செய்த குற்றச்சாட்டில் சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனம் சிக்கி, அதன் தலைவர் ராமலிங்க ராஜூ கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். பின்னர், சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனம், மகேந்திரா குழுமத்துடன் இணைக்கப்பட்டு, டெக் மகேந்திரா என்ற பெயரில் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories: