ஜெகதாபட்டினம் மீன்பிடி தளத்தில் பிளாஸ்டிக் கழிவுகளால் டெங்கு கொசு உற்பத்தி அபாயம்

அறந்தாங்கி: ஜெகதாபட்டினம் மீன்பிடி தளத்தில் தேங்கியுள்ள பிளாஸ்டிக் கழிவுகளால் டெங்கு கொசு உற்பத்தியாகும் அபாயம் உள்ளது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் மீன்பிடி இறங்கு தளத்தில் இருந்து சுமார் 350க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் ஜெகதாபட்டினத்தில் மறைமுகமாக சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர். ஜெகதாபட்டினம் மீனவர்கள் பிடித்து வரும் மீன், இரால், நண்டு மூலம் நாட்டிற்கு அந்நிய செலாவணி கிடைத்து வருகிறது.

பல ஆயிரம் மக்களுக்கு வேலை வாய்ப்பை பெற்றுத்தரும் ஜெகதாபட்டினம் மீன்பிடி இறங்கு தளத்தில், கடற்கரை ஓரமாக குவிந்துள்ள பல டன் பிளாஸ்டிக் கழிவுகளால், அப்பகுதியில் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. பிளாஸ்டிக் கழிவுகளில் முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும் கொசுக்கள் மீனவ மக்களை கடிப்பதால், அவர்கள் பலவித நோய்களின் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். சிலர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜெகதாபட்டினம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் கடலுக்குள் கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளில் உருவாகும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. பிளாஸ்டிக் கழிவுகள் விசைப்படகுகளின் விசிறிகளில் சிக்குவதால், விசிறிகள் சேதமடைகின்றன. இதனால் மீனவர்களுக்கு பெரிய அளவில் இழப்பு ஏற்படுகிறது.

பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறப்படுத்துமாறு மீனவர்கள் மணமேல்குடி ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திடம் முறையிட்டும் அவர்கள் அவற்றை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. எனவே மீன்பிடி இறங்கு தளத்தில் கடற்பகுதியில் குவிந்துள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற வேண்டும் என்பதே மீனவர்களின் கோரிக்கையாகும்.

Tags : Dengue
× RELATED டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில்...