×

திருச்சுழி-கமுதி மார்க்கத்தில் மழையால் சகதிக்காடான தற்காலிக சாலை

திருச்சுழி:  திருச்சுழி-கமுதி மார்க்கத்தில் பனையூர் அருகே, புதிய பாலப் பணி நடக்கும் சாலை அருகே அமைக்கப்பட்டுள்ள தற்காலிக சாலை மழைக்கு சேறும், சகதியுமாக மாறியுள்ளது. இதில் வாகனங்கள் சிக்கி போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. மதுரையில் இருந்து காரியாபட்டி, திருச்சுழி வழியாக கமுதி செல்லும் சாலை, பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் குண்டும், குழியுமாக இருந்தது. இதனால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வந்தனர். இதனால், பெரும்பாலான வாகன ஓட்டிகள் 15 கி.மீ., தூரம் சுற்றி அருப்புக்கோட்டை வழியாக சென்று வந்தனர். இந்நிலையில், காரியாபட்டி முதல் கமுதி வரை 50 கி.மீ., தூர சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனையேற்று, தமிழக அரசு ரூ.38 கோடி ஒதுக்கி, சாலை விரிவாக்கம் செய்யும் பணி கடந்த 4 மாதங்களுக்கு மேலாக நடந்து வருகிறது. இப்பணியில் மழை நீர் செல்ல சாலையின் குறுக்கே புதிய பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இவ்வாறு பணிகள் நடக்கும் பகுதிகளில், தற்காலிக தூம்பு பாலம் அமைத்து, அதன் மேல் சாலை அமைத்து, வாகனங்கள் செல்ல வழி அமைக்க வேண்டும்.

ஆனால், பனையூர் அருகே புதிய பாலம் அமைக்கும் சாலையில், தற்காலிக சாலை அமைக்கப்படவில்லை. சாலையின் ஓரத்தில் காட்டுப்பகுதியில் மண்ணை நிரவி தற்காலில் சாலை அமைத்தனர். இந்த வழியாக வாகனங்கள் சென்று வந்தன. இந்நிலையில், மழை பெய்ததால், தற்காலிக சாலை சகதிக்காடானது. இதனால், மதுரையிலிருந்து வருகின்ற வாகனங்கள் சேற்றில் சிக்குகின்றன. இதனால், போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. பயணிகள் உரிய நேரத்துக்கு செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். நேற்று காலையில் லாரி சேற்றில் சிக்கியதால் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. எனவே, பனையூர் அருகே, புதிய பாலம் அமைக்கும் சாலையில், தற்காலிக சாலையை தரமாக அமைத்து, வாகனங்கள் சென்று வருவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : road ,Kamudi ,Tiruchi ,rain. Road , Road
× RELATED கமுதி அருகே பழைய கட்டிடத்தில் இயங்கும் மின்வாரிய அலுவலகம்