தென்மேற்கு பருவமழை அதிகமாக பெய்தும் வறண்டு கிடக்கும் 3 அணைகள்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில், தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விட அதிகமாக பெய்த நிலையிலும் 8 அணைகளில் 3 அணைகள் சொட்டுத் தண்ணீரின்றி வறண்டு கிடக்கின்றன. தற்போது தொடங்கியுள்ள வடகிழக்கு பருவமழையிலாவது 3 அணைகள் நிரம்புமா என விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர். விருதுநகர் மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழையளவு 820.10 மி.மீ, மாவட்டத்தில் கடந்த 19 ஆண்டுகளில் 2005-6, 2008, 2015 ஆகிய 4 ஆண்டுகளில் மட்டும் சராசரியை விட கூடுதலாக மழை பெய்துள்ளது. ஜன., பிப் குளிர்காலத்தில் 42.80 மி.மீ. மார்ச் முதல் மே வரையிலான கோடையில் 161.5 மி.மீ., ஜூன் தொடங்கி செப். வரையிலான தென்மேற்கு பருவமழை காலத்தில் 196.80 மி.மீ, அக்டோபரில் தொடங்கி டிச.வரையிலான வடகிழக்கு பருவமழை காலத்தில் 419 மி.மீ மழை என சராசரியாக 820.10 மி.மீ மழை பெய்ய வேண்டும்.

இந்நிலையில் நடப்பு 2019ல் குளிர் காலத்தில் 11.53 மி.மீ, கோடையில் 100.50 மி.மீ., தென்மேற்கு பருவமழை காலத்தில் 19 ஆண்டுகளில் இல்லாத அளவாக 333.55 மி.மீ மழை பெய்துள்ளது. வடகிழக்கு பருவமழை அக்.16 முதல் பெய்ய துவங்கி மாவட்டம் முழுவதும் பரவலாக பெய்து வருகிறது. நேற்று (அக்.22) பெய்த மழையளவு மி.மீ வருமாறு: அருப்புக்கோட்டையில்-4, சாத்தூர்-4, திருவில்லிபுத்தூர்-9, விருதுநகர்-7, திருச்சுழி-5.50, ராஜபாளையம்-2, காரியாபட்டி-20.80, வத்திராயிருப்பு-1, பிளவக்கல்-6.40, வெம்பக்கோட்டை -1.40, கோவிலாங்குளம்-6.20 மி.மீ மழை பதிவானது. அக்.22ம் தேதி வரை 71.77 மி.மீ மழை பெய்துள்ளது. இந்நிலையில் மாவட்டத்தில் உள்ள 1020 கண்மாய்களில் ஒன்றிரண்டை தவிர மற்ற அனைத்து கண்மாய்களும் வறண்டு கிடக்கின்றன.

மாவட்டத்தில் உள்ள அணைகளில் நேற்றைய நிலவரப்படி நீர்மட்டம் (அடியில்): 44 உயரமுள்ள பிளவக்கல் பெரியாறு அணையின் நீர்மட்டம் 29 அடி. நீர்வரத்து வினாடிக்கு 148 கன அடி. 40 அடி உயரமுள்ள கோவிலாறு அணையின் நீர்மட்டம் 12 அடி. நீர்வரத்து வினாடிக்கு 0.08 கன அடி. 23 அடி உயரமுள்ள ஆனைக்குட்டம் அணையின் நீர்மட்டம் 11 அடி. 7 அடி உயரமுள்ள குல்லூர் சந்தை அணையின் நீர்மட்டம் 1.8 அடி. 30 அடி உயரமுள்ள சாஸ்தாகோவில் அணையின் நீர்மட்டம்-30 அடி.

இது தவிர வெம்பக்கோட்டை அணை, கோல்வார்பட்டி அணை, இருக்கன்குடி அணை ஆகிய 3 அணைகளும் சொட்டு தண்ணீரின்றி வறண்டு கிடக்கின்றன. மாவட்டத்தில் உள்ள 8 அணைகளில் சாஸ்தாகோவில் அணை மட்டும் நிரம்பியுள்ளது. வினாடிக்கு வரும் 52.3 கனஅடி நீரும், முழுமையாக வெளியேற்றப்படுகிறது. அக்.22 வரை வடகிழக்கு பருவமழை சராசரியான 419 மி.மீல் அக்.22 வரை 71.77 மி.மீ மழை பெய்துள்ளது. சராசரியை விட தென்மேற்கு பருவமழை  கூடுதலாக 169.49 சதவீதம் பெய்துள்ளது. வடகிழக்கு பருவமழையில் 17 சதவீதம் பெய்த நிலையில் அணைகள், கண்மாய்கள், குளங்களுக்கு தண்ணீர் வராமல் இருப்பதால், 2021ல் நிலத்தடி நீர் மட்டம் உயர்வதற்கு வாய்ப்பில்லாத நிலையில், தண்ணீர் தட்டுப்பாடு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கின்றனர்.

Related Stories: