×

கோட்டூர்ரோடு ரயில்வே சுரங்க நடைபாதையில் தேங்கும் மழைநீரால் மக்கள் தவிப்பு

பொள்ளாச்சி: பொள்ளாச்சி கோடடூர்ரோடு ரயில்வே பாலம் கீழ் சுரங்க நடைபாதையில் தொடர்ந்து தேங்கும் கழிவுநீரால் மக்கள் தவிக்கின்றனர். பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட கோட்டூர் ரோட்டில்  பெரியார்காலனி கிழக்கு மற்றும் மேற்கு, நடராஜ் மணியக்காரர் காலனி, ஓம்சக்தி நகர், 20அம்ச திட்ட சாலை, கோட்டூர் ரோடு ஒருபகுதி உள்ளிட்ட இடங்கள் அடங்கியுள்ளது. இந்த வார்டில் குடியிருப்புகள் அதிகம் இருந்தாலும், அதில் பெரும்பாலும் கூலித்தொழிலாளர்களே வசிக்கின்றனர்.

இதில் பெரியார் காலனி, நடராஜ் மணியகாரர்காலனி, சூளேஸ்வரன்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு மக்கள் செல்ல வசதியாக, சுமார் 6 ஆண்டுகளுக்கு முன்பு, கோட்டூர் ரோடு ரயில்வே பாலத்தின் கீழ் பகுதியில் சுரங்க நடை பாதை அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் மழைக்காலத்தில் அங்கு கழிவுநீருடன் சேர்ந்து தண்ணீர் தேங்கி கொள்ளும்போது, அந்த வழியாக இருசக்கர  வாகனங்களோ, பொதுமக்களோ செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.

மேலும் சுரங்க பாதையில் தேங்கும் மழைநீருடன்  கழிவுநீரால் துர்நாற்றம் வீசுவதுடன், கொசு உற்பத்தி அதிகமாக உள்ளது.  இதன் காரணமாக அந்த பாதையை பெரும்பாலும் மக்கள் பயன்படுத்துவதை தவிர்க்கின்றனர். இந்த சுரங்க பாதையில் தேங்கும் கழிவுநீர் வெளியேறி செல்ல முறைப்படுத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.  ஆனால் அதற்கான எந்த நடவடிக்கையும், சம்பந்தபட்ட அதிகாரிகள் எடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தற்போது, கோட்டூர்ரோடு மேம்பாலம் கீழ் பகுதியில் உள்ள சுரங்கபாதையில் மழைநீர் குளம்போல் நாள் கணக்கில் தேங்கியுள்ளது. இதனால் அந்த வழியாக வாகன போக்குவரத்து என்பது தொடர்ந்து தடை ஏற்பட்டுள்ளதால், பொதுமக்கள் வேதனையடைந்துள்ளனர்.

பொதுமக்கள் கூறுகையில், ‘ரயில்வே பாலம் கீழ் பகுதி சுரங்க நடைபாதையில் கழிவுநீருடன் தேங்கும் மழைநீர் வெளியேற முடியாமல் இருப்பதால், அந்த வழியாக பொதுமக்கள் செல்வதை நிறுத்தியுள்ளனர். மேலும் ஆட்டோ, இருசக்கர வாகன ஓட்டிகள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குடிமகன்கள் மதுகுடித்துவிட்டு பாட்டிலை அங்கேயே போட்டு அசுத்தம் செய்கின்றனர்’ என்றனர்.

Tags : rainwater storms ,railway mining corridor ,Kottoor Road. Pollachi , Pollachi
× RELATED கட்டுக்கடங்காத கொடூர நச்சுயிரி...