கோமுகி அணை நீர்மட்டம் 42.5 அடியாக உயர்வு: பாசனத்திற்கு தண்ணீர் திறக்க விவசாயிகள் எதிர்பார்ப்பு

சின்னசேலம்: கோமுகி அணையின் நீர்மட்டம் 42.5 அடியாக உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளது. விழுப்புரம் மாவட்டத்தின் மேற்குப்பகுதியில் கல்வராயன் மலையடிவாரத்தில் கோமுகி அணை உள்ளது. இந்த அணையில் இருந்து உற்பத்தியாகும் கோமுகி ஆறு கள்ளக்குறிச்சி வழியாக பாய்ந்தோடி, கடலூர் மாவட்டம் நல்லூர் கிராமத்தில் மணிமுக்தா நதியுடன் கலக்கிறது. இந்த கோமுகி ஆற்றின் குறுக்கே செம்படாகுறிச்சி, சோமண்டார்குடி உள்ளிட்ட 11 இடங்களில் அணைக்கட்டுகள் கட்டப்பட்டுள்ளது. கோமுகி ஆற்று நீர் 40 ஏரிகளுக்கு தண்ணீர் சென்று அதன்மூலம் 5860 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

Advertising
Advertising

அதுமட்டுமில்லாமல் புதிய கால்வாய் பாசனத்தின்மூலம் மண்மலை, மாத்தூர், கரடிசித்தூர், மாதவச்சேரி உள்ளிட்ட கிராமங்களில் சுமார்  5ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. வடகிழக்கு, தென்மேற்கு பருவமழையின்போதும்,  கல்வராயன்மலையில் அதிக மழைபொழியும் காலங்களிலும் அணையில் நீர் சேமிக்கப்பட்டு  ஒவ்வொரு ஆண்டும் பாசனத்திற்காக அக்டோபர் மாதம் தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். இந்தநிலையில் கல்வராயன்மலையில் கடந்த சில தினங்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால்  பெரியார், மேகம் நீர்வீழ்ச்சிகளில் நீர்வரத்து உள்ளது. அதைப்போல கல்வராயன்மலையில் இருந்து கல்பொடை, பொட்டியம், மாயம்பாடி  ஆறுகளில்  இருந்து கோமுகி அணைக்கு  150 கனஅடி நீர்வரத்து உள்ளது. அதிக நீர்வரத்து காரணமாக வறண்டு கிடந்த கோமுகி அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து தற்போது 42.5 அடியாக உயர்ந்துள்ளது.

கோமுகி அணையின் மொத்த நீர்மட்டம் 46 அடியாகும். இருப்பினும் அணை கரைகளின் பாதுகாப்பு கருதி 44 அடி வரையே நீர் சேமித்து வைக்கப்படுகிறது. தற்போது அணையின் நீர்மட்டம் 42.5 அடியாக உயர்ந்துள்ளதால் இன்னும் அணையை திறக்க 1.5 அடி நீர் தேவை. கோமுகி அணையை வரும் 30ந்தேதி திறக்க பொதுப்பணித்துறை திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.  இந்த நிலையில் அதற்குள் அணை நிரம்பினால் உபரி நீரை கோமுகி ஆற்றில் திறந்துவிடவும் பொதுப்பணித்துறை நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. அணை தற்போது வேகமாக நிரம்பி வருவதால் பாசன விவசாயிகள் மகிழ்ச்சியுடன் சம்பா பயிரிடும் பணியில் தீவிரமடைந்துள்ளனர். அதேசமயம் பாசனத்திற்காக விரைவில் தண்ணீரை திறந்து விட வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: