தர்மபுரி ராமன்நகரில் 14 ஆண்டிற்கு பிறகு தடுப்பணை நிரம்பியது

தர்மபுரி: தர்மபுரி கலெக்டர் அலுவலகம் அருகே தொடர் மழையால் ராமன்நகர் தடுப்பணை 14 ஆண்டிற்கு பிறகு நிரம்பியதால். விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தர்மபுரி கலெக்டர் அலுவலகம் அருகே உங்காரனஅள்ளி ஊராட்சி ராமன்நகரில், சனத்குமார் நதியின் குறுக்கே தடுப்பணை உள்ளது. இந்த தடுப்பணைக்கு வத்தல் மலையில் இருந்து இலக்கியம்பட்டி ஏரிக்கு செல்லும் கால்வாய் செல்கிறது. இந்த கால்வாய் ஆக்கிரப்பின் பிடியில் உள்ளது. ஆக்கிரமிப்பை அகற்றி நீர்நிலை கால்வாயை தூர்வார வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் கடந்த 17ம் தேதி வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்தது. தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று விடிய விடிய மழை கொட்டியது. இதில், ராமன்நகர், நேருநகர், இபி காலனி மற்றும் அரசு கலைக்கல்லூரி சுற்று வட்டார பகுதிகளில் பெய்த மழையால் மழைநீர் பெருக்கெடுத்தது. இதனால் ராமன்நகர் தடுப்பணை நிரம்பிய உபரிநீர் வெளியேறியது. உபரிநீர் இலக்கியம்பட்டி ஏரிக்கு செல்கிறது. இலக்கியம்பட்டி ஏரியும் நிரம்பும் நிலையில் உள்ளது. ராமன்நகர் தடுப்பணை 14 ஆண்டுக்கு பிறகு நிரம்பி, உபரிநீர் செல்கிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் தடுப்பணையில் இருந்து வெளியேறும் உபரி நீர் செல்லும் கால்வாய்கள் தூர்வாரப்படாததால், தண்ணீர் செல்லும் வழித்தடத்தில் உள்ள அழகாபுரி, வஉசி நகர் குடியிருப்பு பகுதியில் தண்ணீர் சூழ்ந்தது. இதனால் மக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றன.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ராமன் நகர் தடுப்பணையில் குப்பை மற்றும் கழிவுகளை கொட்டுகின்றனர். நீர் மாசுயடைந்து துர்நாற்றம் வீசுகிறது. தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. இந்தநிலையில் நேற்று அதிகாலை வரை கொட்டிய மழையில் தடுப்பணை நிரம்பி உபரிநீர் வெளியேறுகிறது. தடுப்பணையில் தண்ணீர் தேங்கியதால், ராமன்நகர் சுற்றுவட்டார பகுதியில், நிலத்தடிநீர் மட்டம் உயர்ந்துள்ளது. தடுப்பணையின் உபரிநீர் இலக்கியம்பட்டி ஏரிக்கு செல்கிறது. இன்னும் ஓரிரு நாட்களில் இலக்கியம்பட்டி ஏரி நிரம்பி விடும் என்றனர். மேலும் ராமன்நகர் தடுப்பணை கால்வாயை தூர்வார அரசு நிதி ₹29 லட்சம் ஒதுக்கீடு செய்தது. சனத்குமார நதியின் கால்வாய் தூர்வார அரசு ₹50 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. இந்த இரண்டு திட்டப்பணிகளையும் மாவட்ட கலெக்டர் விரைவு படுத்த வேண்டும் என்றனர்.

கிராம மக்கள் கிடா வெட்டி வழிபாடு

தர்மபுரி அருகே இலக்கியம்பட்டி ஏரி, சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. மாவட்டத்தில் ஏற்பட்ட தொடர் வறட்சி காரணமாக, இலக்கியம்பட்டி ஏரிக்கு நீர் வரத்து இன்றி இருந்தது. கடந்த 2013ம் ஆண்டு பொதுமக்கள் சார்பில், ஏரி தூர்வாரப்பட்டது. 2014ம் ஆண்டு பெய்த கனமழைக்கு கூட ஏரி முழுவதும் நிரம்பவில்லை. இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக, தர்மபுரி வட்டாரத்தில் மழை பெய்து வருகிறது. இதனால் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவில் விடிய விடிய பெய்த கனமழைக்கு, 14 ஆண்டுகளுக்கு பின்னர் இலக்கியம்பட்டி ஏரி மழை வெள்ளத்தால் முற்றிலும் நிரம்பி, தண்ணீர் வழிந்து வெளியேறியது.

தகவல் அறிந்த இலக்கியம்பட்டி கிராம மக்கள் திரண்டு வந்து ஏரியை பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் ஏரிக்கோடியில் பாப்பிரெட்டிபட்டி எம்எல்ஏ கோவிந்தசாமி தலைமையில் ஊர் நிர்வாகி சுவாமிநாதன், காளியப்பன், தொழிலதிபர் பழனிசாமி, மணி, அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் பழனிசாமி, முன்னாள் வார்டு மெம்பர் ரவி, சங்கர் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் பூஜை செய்து கிடாவெட்டி வழிபாடு நடத்தினர். நேற்று பெய்த மழையின் அளவு விபரம்: தர்மபுரி- 42 மில்லி மீட்டர், ஒகேனக்கல்- 25 மி.மீ, பென்னாகரம்- 6 மி.மீ, அரூர்- 5 மி.மீ, பாப்பிரெட்டிப்பட்டி- 4 மி.மீ, பாலக்கோடு- 2 மி.மீ.

Related Stories: