வனவிலங்குகளுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் சப்தமில்லாத தீபாவளி கொண்டாடுங்கள்

ஊட்டி: முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட கிராம பகுதிகளில் வன விலங்குகளுக்கு இடையூறு மற்றும் தீங்கு ஏற்படாத வகையில் சப்தமில்லாமல் தீபாவளி பண்டிகையை கொண்டாடுமாறு வனத்துறை அறிவுறுத்தி உள்ளது. நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் 688 சதுர கி.மீ., பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு புலி, சிறுத்தை, யானை, காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வகையான வன விலங்குகளும், பறவையினங்கள், அரிய வகை தாவரங்கள் உள்ளன. வரும் 27ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட மசினகுடி, சிங்காரா, பொக்காபுரம், தெங்குமரஹாடா உள்ளிட்ட கிராமங்களில் வன விலங்குகளுக்கு அச்சுறுத்தல் இல்லாதவாறு சப்தமில்லாமல் தீபாவளியை கொண்டாடுமாறு வனத்துறை கேட்டு கொண்டுள்ளது. மேலும் வன விலங்குகள் மற்றும் வனப்பகுதிகளில் தீங்கு விளைவிக்கும் செயல்களில் யாரேனும் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை எச்சரித்துள்ளது.

முதுமலை புலிகள் காப்பக வெளி மண்டல துணை இயக்குநர் ஸ்ரீகாந்த் கூறியிருப்பதாவது: காப்பகத்தினை சுற்றியும் மற்றும் உள்ளடக்கியும் பல கிராம பகுதிகளும், குடியிருப்புகளும், தனியார் விடுதிகளும் உள்ளன. தீபாவளிப் பண்டிகையின் போது பட்டாசு வெடிப்பது நமது கலாசாரம். பட்டாசு வெடிப்பதன் மூலமாக ஏற்படும் காற்றினில் கலக்க கூடிய மாசு மற்றும் வெடியினால் எழும் சப்தம் வனவிலங்குகளை பாதிக்கும். இதனால் வன விலங்குகளுக்கு அச்சம் அல்லது கோபம் ஏற்பட்டு அதன் இயல்பான தன்மையில் இருந்து மாறி நமக்கு இடையூறு ஏற்படுத்த அதிக வாய்ப்புள்ளது. இன்றைய சூழலில் பெரும்பான்மையான மக்களிடம் சுற்றுசூழல் பாதுகாப்பு மற்றும் வன உயிரினங்களின் முக்கியத்துவம் குறித்த புரிதல் உள்ளது.

எனவே முதுமலை புலிகள் காப்பகத்தை சுற்றியுள்ள மசினகுடி, மாயார், சிங்காரா, வாழைத்தோட்டம், பொக்காபுரம், ஆனைகட்டி, சிறியூர், தெங்குமரஹாடா மற்றும் அனைத்து சிறு கிராமங்களில் உள்ள பொதுமக்கள் வனவிலங்குகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படாத வண்ணம் மாசில்லாத, சப்தமில்லாத பசுமை தீபாவளியாக கொண்டாட வேண்டும். வன விலங்குகளுக்கோ, வனப்பகுதிக்கோ, சுற்றுசூழலுக்கோ தீங்கு விளைவிக்கும் விதமான எவரேனும் செயல்பட்டால் அவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இவ்வாறு துணை இயக்குநர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

Related Stories: