வந்தவாசி அருகே கரும்பு தோட்டத்தில் மேய்ச்சலுக்கு கட்டியிருந்த மாடு சிறுத்தை தாக்கி பலி

வந்தவாசி: வந்தவாசி அருகே கரும்பு தோட்டத்தில் மேய்ச்சலுக்கு கட்டியிருந்த மாட்டை சிறுத்தை அடித்து கொன்றது. இதனால் அந்த பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர். வந்தவாசி அடுத்த ஆரியாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தனசேகர்(45). இவருக்கு சொந்தமான கரும்பு தோட்டம் விளாங்காடு கிராமத்தில் உள்ளது. தோட்டத்தில் நேற்று மாட்டை மேய்ச்சலுக்காக கட்டி வைத்திருந்தார். இந்நிலையில் பிற்பகல் 3 மணியளவில் அந்த வழியாக சென்றவர்கள் குடல் சரிந்த நிலையில் மாடு உயிருக்கு போராடிக்கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே அருகில் சென்று பார்த்தபோது அங்கு சுற்றிலும் சிறுத்தையின் கால் தடங்கள் பதிந்திருப்பது தெரிந்தது. மேய்ந்து கொண்டிருந்த மாட்டை சிறுத்தை அடித்து கொன்றிருக்கலாம் என்று உறுதி செய்தனர். சிறிது நேரத்தில் அந்த மாடு உயிரிழந்தது.

இதுகுறித்து கீழ்கொடுங்காலூர் காவல் நிலையத்திற்கும், வருவாய் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் தாசில்தார் எஸ்.முரளி, சப்-இன்ஸ்பெக்டர்கள் விஜயன், ஜெய்சங்கர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அங்கு பதிவாகி இருந்த கால் தடங்களை பார்த்தபோது அது சிறுத்தையின் கால் தடம் போல் இருப்பது தெரிய வந்ததால் உடனடியாக ஆரணி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டனர். மாட்டை சிறுத்தை அடித்து கொன்று உள்ளதால் அப்பகுதி பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். இதுவரை இப்பகுதியில் ஆபத்தான காட்டு விலங்குகள் எதுவும் வராத நிலையில், தற்போது திடீரென சிறுத்தை மாட்டை அடித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: