×

வி.கே.புரம் அருகே பரபரப்பு: 4 ஆடுகளை கடித்து குதறிய சிறுத்தை: கிராம மக்கள் அச்சம்

வி.கே.புரம்: வி.கே.புரம் அருகே கிராமத்தில் புகுந்து 4 ஆடுகளை சிறுத்தை கடித்து குதறியது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனர். நெல்லை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையில் புலிகள் சரணாலயம் அமைக்கப்பட்டு யானை, சிறுத்தை, புலி, கரடி, மிளா, குரங்கு உள்ளிட்ட வன விலங்குகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. வன விலங்குகள் அடிக்கடி மலையில் இருந்து இறங்கி கிராமங்களில் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. சிறுத்தையும் அவ்வப்போது ஊருக்குள் புகுந்து ஆடு, மாடு மற்றும் நாய்களை அடித்துக் கொன்று இழுத்துச் சென்று விடுகிறது. மணிமுத்தாறு பேரூராட்சிக்குட்பட்ட வேம்பையாபுரம் காலனி மலையடிவாரத்தில் உள்ளது. இங்கு 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இவர்கள் விவசாயம் செய்து வருவதோடு, வீட்டில் ஆடு, மாடுகளும் வளர்த்து வருகின்றனர். இந்த ஊரைச் சேர்ந்தவர் வள்ளியம்மாள் (70). இவர் தனது வீட்டில் 4 ஆடுகள் வளர்த்து வந்தார். அவ்வப்போது விவசாய கூலி வேலைக்கும் செல்வதுண்டு. நேற்று முன்தினம் இரவு மேய்ச்சலுக்கு சென்று திரும்பிய 4 ஆடுகளை வீட்டை ஒட்டிய தொழுவத்தில் கட்டி போட்டிருந்தார். நேற்று காலை வழக்கம்போல் வள்ளியம்மாள் தொழுவத்திற்கு சென்று பார்த்த போது 4 ஆடுகளும் இறந்து கிடந்தன. அப்பகுதியில் சிறுத்தை வந்து சென்றதற்கான கால்தடங்களும் பதிவாகி இருந்தன. இதுகுறித்து பாபநாசம் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

வனவர் மோகன் தலைமையில் வனத்துறையினர் வனக்காப்பாளர் பெருமாள், வனக்காவலர் செல்வம் ஆகியோர் வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டனர். அவர்களிடம் வள்ளியம்மாள், எனது கணவர் இறந்து விட்டதால், இந்த ஆடுகளை வைத்துதான் பிழைத்து வந்தேன். இப்போது அதையும் பறி கொடுத்து விட்டேன். எனக்கு உரிய நஷ்ட ஈடு பெற்றுத்தர வேண்டும் என்று கோரினார். மீண்டும் சிறுத்தை வராமல் இருக்க இப்பகுதியில் கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

நாய் வளர்க்க மக்கள் அச்சம்

வேம்பையாபுரம் காலனி மக்களும், மற்ற பகுதிகளைப்போல் ஆர்வத்துடன் நாய் வளர்த்து வந்தனர். கடந்த சில மாதங்களாக இரவு நேரத்தில் நாய்கள் ஒன்றன்பின் ஒன்றாக காணாமல் போனது. அப்போதுதான் அவர்களுக்கு நாய்களை சிறுத்தை வேட்டையாடியது தெரியவந்தது. அதன்பிறகு இப்பகுதி மக்கள் யாரும், நாய் வளர்ப்பதில்லை.

Tags : VK Puram , Leopard
× RELATED வி.கே.புரம் அருகே 6வது முறையாக கூண்டில் பிடிபட்டது சிறுத்தை